இலங்கை தமிழர்களுக்கு உதவி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட…

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்துப் பேசினார். ​இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது நிலவும் தீவிரப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, வேதனையில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்த்தார்.

இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு அத்தியாவசிப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்ட முதலமைச்சர், மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் வினியோகிக்க உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்தார் முதலமைச்சர். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுத்திடவும் வலியுறுத்தினார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.