கட்டுரைகள் சினிமா

’பீஸ்ட்’க்கு தடை கோரும் கட்சிகள்; ரசிகர்களை கட்டுப்படுத்தும் விஜய்


வேல் பிரசாந்த்

கட்டுரையாளர்

தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடைகோரி வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் யாரையும் அநாகரீகமாக விமர்சிக்கக்கூடாது என விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் நடிகர் விஜய்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது பெரும் எதிர்பார்ப்புகளும், கொண்டாட்டங்கள் உருவாகும் அதே வேளையில் விமர்சனங்களும், சர்ச்சைகளும் எழுவது வாடிக்கை. எம்.ஜி.ஆர் தொடங்கி ரஜினி, கமல் என யாருமே இதிலிருந்து தப்பியதில்லை. அதிலும் தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜயோ ஓவர் டைமில் பல பஞ்சாயத்துகளை சந்தித்து வருகிறார். மற்ற நடிகர்களுக்கெல்லாம் பிரச்னைகளாலும் சர்ச்சைகளாலும் படத்தின் வெற்றி பாதிக்கப்படும் நிலையில், விஜய் படங்களுக்கோ அது ஒரு மார்க்கெட்டிங்காகவே மாறிவிடுகிறது என்ற கருத்துக்களும் உண்டு.

தலைவா படத்தின் டைட்டிலில் ‘Time to lead’ என போட்டதிலிருந்தே விஜய் படங்களுக்கான ‘Time to problem’ ஆரம்பித்துவிட்டதாகவே சினிமா ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். ஆரம்பத்தில் இப்பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணறினாலும் அடுத்தடுத்த காலங்களில் இதை லாவகமாக கையாளத் தொடங்கினார் விஜய். அஜித் நடித்த வலிமை படத்தில் ஒரு மோட்டிவேஷ்னல் தத்துவம் வரும், “ எதிரிங்க நம்ம மேல கல்லெறியத்தான் செய்வாங்க.அதையெல்லாம் தடுத்து பதில் சொல்லிட்டிருந்தோம்னா பாதி வாழ்க்கை போய்டும்; அதுக்கு பதிலா அந்த கல்லை எல்லாம் கேட்ச் புடிச்சி கோட்டை கட்டி அதுமேல உக்காந்தோம்னா எதிரிங்க நம்மல கழுத்து வலிக்க பாத்துட்டு போய்டுவாங்க” என்பதே அந்த அரிய தத்துவம்.

 

தலைவா படத்திற்கு பிறகு விஜய் கூட இதே பாணியில் கற்களை ‘கேட்ச்’ பிடித்து கோட்டை கட்ட தொடங்கினார் என்றே எடுத்துக்கொள்ளலாம். ‘மெர்சல்’ வெளியானபோது அப்படம் சுமார் ரகம் தான் என விமர்சனங்கள் வந்தன. இருப்பினும் அப்படம் மத்திய பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ளது எனக்கூறி எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் பலர் கடுமையாக விமர்சித்தனர். படத்தை நெட்டில் பார்த்துதான் விமர்சனம் சொன்னேன் என்று எச்.ராஜா கூறிய நிலையில், அப்படத்தை நெட்டில் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என காத்திருந்த பலரும் தியேட்டருக்கே சென்று பார்க்கத் தொடங்கினர். இந்நிலையில், வெளியான ஒரே வாரத்தில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது அப்படம்.

‘இப்பெல்லாம் உங்க பனிஷ்மெண்டே டீரீட்மெண்டா மாறுதே!’ என விஜய் ரசிகர்கள் கிண்டலடிக்கத் தொடங்கினர். இதைக்கண்ட மற்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் ‘பாஸ்..பாஸ்..எங்க படத்தையும் இதே மாதிரி கொஞ்சம் கவனிச்சி விடுங்களேன்’ என்று கேட்ட சம்பவங்களும் அரங்கேறின. சூர்யாவின் சூரரைப்போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் பல சர்ச்சைகளுக்கு மத்திய மெகா ஹிட்டானதையும் இந்நேரத்தில் நாம் கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது. மெர்சலை தொடர்ந்து சர்க்கார், பிகில் உள்ளிட்ட படங்களுக்கும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதிலும் குறிப்பாக பிகில் first look-ன் போது விஜய் கறிக்கடையில் கறி வெட்டும் மரக்கட்டை மீது கால் வைத்து அமர்ந்திருப்பதைப் போல் இருக்கிறது .இது எங்கள் தொழிலை அவமதிப்பதாக உள்ளதெனக் கூறி கறிக்கடை உரிமையாளர்கள் சிலர் போராட்டத்தில் குதித்து உலகையே வியக்க வைத்தனர். ‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ என விஜய் ரசிகர்களே ஷாக் ஆன உன்னத தருணம் அதுவாகத்தான் இருக்கும்.

இதன்பிறகு மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய் வீட்டில் ரெய்டு நடந்ததும், அடுத்த நாட்களிலேயே அவர் ரசிகர்களுடன் செல்பி போட்டதும் அது உலகளவில் ட்ரெண்ட் ஆனதும் நாடறிந்த கதை.‘தென்றலை தீண்டாமல் தீயை தாண்டி’ வந்த விஜயின் சர்ச்சை படங்களின் லிஸ்ட்டில் புதிதாக சேர்ந்துள்ள படம் தான் பீஸ்ட். இப்படத்தின் ட்ரெயிலரில் விஜயின் ஓப்பன் காட்சியிலேயே ஒரு பெரிய காவி நிறத்திரை காட்டப்படுகிறது. கத்தியால அதில் ‘சதக்’ என சொருகி மெதுவாக ‘டர்ர்..’ என கிழித்து அதன் வழியே எண்ட்ரி கொடுத்தார் விஜய். இதனைக் கண்ட சிலர் ‘கண்ணாயிரம் அந்த வெப்பன்ஸ எடு’ என்ற தொனியில் படத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். காவி நிற திரையை கிழிப்பது இந்து அமைப்புகளுக்கும், பாஜகவும் எதிரான நிலைப்பாட்டையே காட்டுகிறது என்ற விமர்சனங்கள் வந்தபோதிலும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் யாரும் பீஸ்ட் படத்திற்கு எதிராக கருத்துக்கள் தெரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தலைவா படத்திற்குப் பிறகு விஜய் அப்டேட் ஆனது போல, மெர்சல் படத்திற்குப் பிறகு விமர்சனமே பண்ணமாட்டோம் என இவர்களும் அப்டேட் ஆகிவிட்டனர்.

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் சில காட்சிகளில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் இதே குற்றச்சாட்டை முன்வைத்து அப்படம் வெளியிட தடை செய்யப்படுகிறது என்ற செய்திகள் இணையத்தை ஆக்கிரமித்தன. பீஸ்ட் படக்குழுவினர் வெளியிட்ட முதல் வீடியோவே அரபு மொழி வரிகளைக் கொண்டு பாடப்பட்ட அரபிக் குத்து பாடல் தான். பாடலை போனில் கேட்ட விஜய்கூட ‘ உங்களையெல்லாம் நம்ப முடியாது, பாட்ட எடுத்துட்டு நாளைக்கு வீட்டுக்கு வாங்க’ என்று சொல்வது போலான காட்சிகளும் அதில் இருந்தது. இப்படி ராப்பகலாக உழைத்து உருவாக்கிய அரபிக் குத்து பாடல் இருந்தும் அதை அரபு நாட்டிலேயே தடை செய்துவிட்டார்களே எனவும் சில விஜய் ரசிகர்கள் புலம்பத் தொடங்கினர்.

மேலும், குவைத்தில் தடை செய்யப்பட்டதற்கான அதே காரணத்தை மேற்கோள் காட்டி தமிழ்நாட்டிலும் பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் என போர்கொடி தூக்கியுள்ளது தமிழ்நாடு முஸ்லீக் லீக் கட்சி. இதுதொடர்பாக விரிவான கடிதம் ஒன்றையும் அக்கட்சி அரசுக்கு அனுப்பியுள்ளது. இதனைத்தொடர்ந்து குறுக்க இந்த பாமாக வந்தா? என்பது போல பாமக சார்பிலும் பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் அல்லது படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நிற்க, நடிகர் விஜய்க்கென்று வெறித்தனமான மாபெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. விஜய்க்கு எதிராக யார் கருத்து கூறினாலும் அவரது ரசிகர்கள் இணையத்தில் அவர்களை பாய்ந்து அட்டாக் செய்வதை பல நேரங்களில் பார்த்துள்ளோம். விஜயே ’என்னுடைய தலைவர் , என்னுடைய இன்ஸ்பிரேஷன்’ என்று புகழ்ந்த ரஜினியைக்கூட அவர்கள் விட்டுவைத்ததில்லை. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்களை மட்டும் எப்படி விட்டு வைப்பார்கள். படத்திற்கு தடை கோரும் அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சிப்பதாக நடிகர் விஜய்க்கு தகவல் சென்றதாக நமக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்துதான், நடிகர் விஜயின் வலதுக்கரம் என்று கூறப்படும் புஸ்ஸி ஆனந்த் மிகவும் காட்டமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசு பதவிகளில் உள்ளவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என யாரையும், எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பேசவோ, எழுதவோ, மீம்ஸ் போடவோ கூடாது. மீறினால் விஜய் மக்கள் இயக்கத்தினரை நீக்குவதோடு சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இயக்கத்தை விட்டு நீக்குவதுக்கூட பரவாயில்லை, சட்ட நடவடிக்கைக் கூடவா? என விஜய் ரசிகர்கள் பலரும் ஜெர்க் ஆகியுள்ளனர்.

‘பீஸ்ட் படம் வெளியாகுற நேரத்துல தளபதி நம்ம கைய கட்டி போட்டுட்டாரே’ என விஜய் ரசிகர்கள் பலரும் புலம்பி வருவதாக தகவல்கள் வருகின்றன. இருப்பினும் நடிகர் விஜயின் இந்த அறிவிப்பு மிகவும் ஆக்கப்பூர்வமானது என்று சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். இதேபோன்ற சம்பவங்களால் தான் நடிகர் அஜித் தன் ரசிகர் மன்றத்தையே கலைத்தார் என்று கூறப்படும் நிலையில் தற்போது விஜய்-க்கும் அதே வகையான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக சினிமா ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். நிஜமாவே வாழ்க்கை ஒரு வட்டம் தான் போல.

Advertisement:
SHARE

Related posts

சம்பளத்தை உயர்த்தினார் நடிகை கீர்த்தி சுரேஷ் !

Halley Karthik

கிளிமஞ்சாரோ மலையில் பிரபல நடிகை

Halley Karthik

நடிகர் மகா காந்தி மீது மான நஷ்ட வழக்கு: விஜய் சேதுபதி வழக்கறிஞர் தகவல்

Halley Karthik