ஆசிய விளையாட்டு: போல் வால்ட்டில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல்வர் வாழ்த்து!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் போல் வால்ட்டில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதலமைச்சர் விஜய் ரூ.30 லட்சம் ஊக்கத்தொக அறிவித்தார்.

முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, “ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், கோல் ஊன்றித் தாண்டும் (Pole Vault) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இவ்வெற்றியைப் பெற்றுள்ள அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அவரது வெற்றி, இலக்கை நோக்கி அயராது உழைக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கும். பரணிகா இளங்கோவன் அவர்கள் தொடர்ந்து பல உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.