போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆர்யன் கானுக்கு அவர் குடும்பத்தினர் மணியார்டர் அனுப்பியுள்ளர்.
மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதைப் பொருட்களை பயன்படுத்தி பார்ட்டி நடப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து , கடந்த 3 ஆம் தேதி அந்த கப்பலில், சாதாரண பயணிகள் போல சென்று நடத்தப்பட்ட திடீர் சோதனையில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்த, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதைதொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. ஆரியன் கான் போதைப்பொருள் தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கம் உடையவர் என போதைப்பொருள் அமைப்பு கூறியது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், ஆரிய கான் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் பயன்படுத்தி வருகிறார் என்று நீதிமன்றத்தில் கூறி அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தார். இதையடுத்து, ஜாமீன் மனு மீதான உத்தரவை 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு அவர் குடும்பத்தினர் மணி ஆர்டர் அனுப்பியுள்ளனர். சிறையில் உள்ள கேன்டினில் செலவழிப்பதற்காக ரூ.4500 ரூபாய் அனுப்பியுள்ளனர். சிறை கைதிகளுக்கு அதிகப்பட்சமாக ரூ.4,500 மட்டுமே மணியார்டர் அனுப்ப முடியும் என்பதால், அவர்கள் அந்த தொகையை அனுப்பியுள்ளதாக சிறை கண்காணிப்பாளர் நிதின் வேச்சல் தெரிவித்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு அவர் அம்மாவும் நடிகர் ஷாருக்கானின் மனைவியுமான கவுரி கான், வீட்டில் இருந்து காலை டிபனும் அவருக்குத் தேவையான பொருட்களையும் சிறைக்கு சில நாட்களுக்கு முன் கொண்டு சென்றார். ஆனால், ஆர்தர் ரோடு சிறை அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.









