போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு அவர் அம்மா ஆசையாக அனுப்பிய காலை டிபனை, சிறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதைப் பொருட்களை பயன்படுத்தி பார்ட்டி நடப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து , கடந்த 3 ஆம் தேதி அந்த கப்பலில், சாதாரண பயணிகள் போல சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்த, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு அவர் அம்மாவும் நடிகர் ஷாருக்கானின் மனைவியுமான கவுரி கான், வீட்டில் இருந்து காலை டிபனும் அவருக்குத் தேவையான பொருட்களையும் சிறைக்கு கொண்டு சென்றார். ஆனால், ஆர்தர் ரோடு சிறை அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்துவிட்டனர்.
நீதிமன்றம் அனுமதி அளிக்காமல், வீட்டு உணவை அனுமதிக்க மாட்டோம் என்றும் சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் உணவே, ஆர்யனுக்கும் வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறையில் காலை 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். 7 மணிக்கு டிபன் வழங்கப்படும். மதிய உணவு காலை 11 மணிக்கும் மாலை 6 மணிக்கு இரவு உணவும் சிறையில் வழங்கப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.









