டுவன்டி20 ஆட்டத்தில் கெஜ்ரிவால்

கேரளாவில் நான்கே நான்கு பஞ்சாயத்துகளில் மட்டுமே தலைகட்டாக இருக்கும் டுவன்டி 20 என்ற கட்சியின் ஆண்டு விழாவில் டெல்லியின் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார். கேரளாவில் டுவன்டி 20 என்ற கட்சி ஆரம்பத்தில்…

கேரளாவில் நான்கே நான்கு பஞ்சாயத்துகளில் மட்டுமே தலைகட்டாக இருக்கும் டுவன்டி 20 என்ற கட்சியின் ஆண்டு விழாவில் டெல்லியின் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார். கேரளாவில் டுவன்டி 20 என்ற கட்சி ஆரம்பத்தில் கார்ப்ரேட் நிறுவனங்களின் உதவியுடன் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமாகதான் செயல்பட்டு வந்தது. தற்போது நான்கு கிராம பஞ்சாயத்துகளில் மட்டுமே அந்த கட்சி வென்றுள்ளது. இதனுடைய ஆண்டு விழாவில் கலந்து கொள்வதன் மூலம் தென் மாநிலங்களில் தன்னுடைய பார்வையை திருப்பி இருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால். இதற்காக வரும் 15ம் தேதி கேரளா செல்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால் என ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரவிந்த் கெஜ்ரிவால் வருமானவரித்துறை அதிகாரியாக பணியைத் தொடங்கினாலும், பின்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கியவர். அப்போது ஊழலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே தொடங்கிய போராட்டத்தில் கலந்து கொண்டு ஒரு பெரிய டீமையே ஒருங்கிணைத்தார். பின்னர் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி டெல்லியில் அசைக்க முடியாத சக்தியாக அரசியலில் உருவெடுத்தார்.

டெல்லியைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்துள்ளது. அந்த வரிசையில் தமது கட்சியை பல்வேறு மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல அர்விந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார்.  அதற்கு அவரது முதல் திட்டம் என்பது, மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக போராடி வரும் என்ஜிஓக்களை ஒருங்கிணைப்பது எனத்தெரிகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் உதயகுமார் போன்றோரை தமது கட்சியில் இணைத்தார். ஆனால் வடக்கத்திய அரசியல் பார்வை தமிழகத்திற்கு செட்டாகாது என்பதால் உதயகுமார் அக்கட்சியில் இருந்து விலகி, பச்சைத் தமிழகம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இது ஒருபுறம் இருக்க, சற்றும் மனம்தளராத அர்விந்த் கெஜ்ரிவால், என்ஜிஓக்கள் நடத்துபவர்களில், அரசியல் ஆர்வம் இருக்கும் நபர்கள் குறித்த லிஸ்டை தயார் செய்துள்ளாராம்.

ஒவ்வொரு மாநிலத்திலும், அவர்களுடைய சமூகபங்களிப்பு என்ன என்பது குறித்த புள்ளி விபரங்கள் அவரிடம் உள்ளன. அந்த வரிசையில் தற்போது கேரளாவை குறிவைத்துள்ளார். டுவன்டி 20 என்ற அரசியல் கட்சி என்பது கார்ப்ரேட் நிறுவனங்கள் தங்களது வருமானத்தின் லாபத்தில் ஒரு பகுதியை சமூக வளர்ச்சிக்காக அளிக்கும், சிஎஸ்ஆர் எனப்படும் கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்ஸ்பிலிட்டி நிதியைக்கொண்டு கிராமபுறங்களை தன்னிறைவு அடைய செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது.

இந்த டுவன்டி 20 அரசியல் கட்சி கேரளாவில் நான்கே நான்கு பஞ்சாயத்துகளில் மட்டுமே வென்றுள்ளது. இதுபோன்ற சிறிய கட்சிகளை உள்ளடக்கி எதிர்காலத்தில் தேசிய அளவில் வலுவான சக்தியாக மாற வேண்டும் என்பதே ஆம் ஆத்மியின் திட்டமாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒரு மாநிலத்தின் முதல்வர் என்றோ, ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவர் என்றோ கருதாமல், நான்கே நான்கு பஞ்சாயத்துகளில் வென்றுள்ள குட்டி கட்சியின் விழாவில் கலந்து கொண்டு, கேரளாவில் இருந்து தென் மாநிலங்களை குறிவைக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.

இராமானுஜம்.கி

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.