ராகுல் வீடியோ சர்ச்சையும்… காங்கிரஸ் விளக்கமும்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் வீடியோ ஏற்படுத்திய சர்ச்சையையும், அதற்கு கட்சி அளித்த விளக்கத்தையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. பிரதமர் மோடி வெளிநாடு பயணம் செல்லும் போதெல்லாம் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ்…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் வீடியோ ஏற்படுத்திய சர்ச்சையையும், அதற்கு கட்சி அளித்த விளக்கத்தையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

பிரதமர் மோடி வெளிநாடு பயணம் செல்லும் போதெல்லாம் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டு, மக்கள் மீது அக்கறையின்றி பிரதமர் டூர் செல்கிறார் என்பதுதான். அதே மாதிரியான விமர்சனத்தை தற்போது காங்கிரசும் எதிர்கொள்கிறது. அக்கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தியின் நேபாள பயணம் தான் தற்போது இணையத்தில் பேசுபொருள்.

பாஜக ஐ.டி. பிரிவின் தேசிய பொறுப்பாளர் அமித் மால்வியா, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ காங்கிரஸ் கட்சியை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது. ராகுல்காந்தி கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டது போன்றதொரு வீடியோவை பதிவிட்ட அவர், காங்கிரஸ் வலுவிழந்துவரும் நிலையில், கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட ராகுல்காந்தி இரவுநேர பார்ட்டி கொண்டாட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

ஒரு குடிமகனாக ராகுல்காந்தி கொண்டாட்டங்கள் மற்றும் தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபடுவது இயல்பானதுதான் என்றாலும், ஒரு தேசிய கட்சியின் நிரந்தர பாஸ்-ஆக இருக்கும் ராகுல்காந்திக்கு இப்போதைய சூழலில் இதுபோன்ற வெளிநாட்டு கொண்டாட்டங்கள் தேவைதானா என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு குறித்த காங்கிரசாரின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க காத்திருந்த பாஜகவினர், ராகுல்காந்தி இரவு விடுதியில் இருக்கும் வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

https://twitter.com/amitmalviya/status/1521362563727986689

இதற்கிடையே, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா விளக்கம் அளித்துள்ளார். அதில், ராகுல்காந்தி, தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகதான் நேபாள தலைநகர் காத்மண்டுக்கு சென்றார் என்று கூறியுள்ளார். திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்வது நமது நாட்டின் கலாச்சாரம் என்று கூறியுள்ள சுர்ஜிவாலா, திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வது இந்த நாட்டில் இன்னும் குற்றமாகவில்லை எனக்கூறினார். இனிமேல் திருமணத்தில் கலந்துகொள்வது சட்டவிரோதம் என்றுகூட பாஜக முடிவு செய்யக்கூடும் என்றும் தனது ஆதங்கத்தை சுர்ஜிவாலா வெளிப்படுத்தினார்.

– தென்றல் பிரபாகரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.