நாட்டின் நலனுக்காக டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் 7 மணி நேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்டார்.
அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இந்த நிலையில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மக்களுக்கு நல்ல கல்வியும் நல்ல சுகாதார வசதிகளும் கிடைக்க நினைத்தவர்களை சிறையில் அடைக்கும் பிரதமர் நாட்டை கொள்ளையடிப்பவர்களுக்கு ஆதரவு அளிப்பது மிகவும் கவலை அளிக்கிறது என்று கூறியிருந்தார்.
அண்மைச் செய்தி : வரத்து குறைந்துள்ளதால் நெல் மூட்டை விலை உயர்வு – மகிழ்ச்சியில் விவசாயிகள்
இதனால் நாட்டின் நலன் குறித்து தான் கவலைப்படுவதாகவும் ஹோலி பண்டிகையன்று நாட்டின் நலனுக்காக நாள் முழுவதும் பிரார்த்தனை செய்ய உள்ளதாகவும் கெஜ்ரிவால் அறிவித்தார். இதன்படி இன்று காலை 10 மணிக்கு தியானத்தை தொடங்கிய அர்விந்த் கெஜ்ரிவால் மாலை 5 மணி வரை 7 மணி நேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்டார்.







