கடந்த ஆண்டை விட நெல் விலையானது கூடுதலாக அதிகரித்ததால் அரிசியின் விலை இந்த ஆண்டு தரத்தை பொறுத்து 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை மூட்டை ஒன்றுக்கு உயர்ந்துள்ளது.
மின்கட்டண உயர்வு ஆட்கள் பற்றாக்குறை நெல் விலையின் உயர்வு காரணமாக அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக நெல் அரிசி வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அரிசியின் விலை 26 கிலோ மூட்டை ஒன்றிற்கு நூறு ரூபாய் மேல் அதிகரித்துள்ளதால் சாமானிய மக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சென்னைக்கு 60 சதவீதம் அரிசியின் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய இடமாக அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகளில் காஞ்சிபுரம், வேலூர், ஆரணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் ஆந்திர மாநிலம் நெல்லூர், விஜயவாடா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அதிக அளவு நெல் வருகிறது. இங்குள்ள அரிசி ஆலைகள் மூலம் தினம்தோறும் 20ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு அரிசியானது உற்பத்தி செய்யப்பட்டு சென்னை மக்களின் உணவு தேவைக்காக தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அறுவடை பணிகள் முடிவடைந்து நெல் வரத்து குறைந்துள்ளது. ஆந்திராவிலிருந்து மட்டுமே நெல் வரத்து தற்போது அதிக அளவில் வருகிறது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல்லின் விலை மூட்டை ஒன்றுக்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், நெல்லின் விலை உயர்ந்ததால் இந்த ஆண்டு அரிசி உற்பத்தியானது மின் கட்டண உயர்வு ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களாலும் உற்பத்தி செலவு அதிகரித்து அரிசியின் விலை கடந்த ஆண்டை விட 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை 26 கிலோ மூட்டை ஒன்றுக்கு அதிகரித்து விற்கப்படுகிறது. தற்போது அதிக அளவில் ஆர்என்ஆர் மற்றும் பிபிடிரகம், மோட்டாராகம் குண்டு இட்லி அரிசி ரகம் போன்றவை அரவை செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது.
இந்த அரிசியின் விலையானது 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்ப விலையானது உயர்த்தப்பட்டுள்ளது தொடர்ந்து அரிசி வரத்தானது ஆரணி காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் வந்தாலும் சென்னைக்கு உணவு தேவை பூர்த்தி செய்யும் முக்கிய மையமாக செங்குன்றம் விளங்கி வருவதாகவும் மீண்டும் அறுவடை பணிகள் திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடங்கினால் நெல்வரத்தானது கூடுதலாக அதிகரிக்கும் பட்சத்தில் அரிசிவிலை குறைய வாய்ப்புள்ளதாகவும் அதுவரை 100 ரூபாய் முதல் 150 வரை விலை அதிகரித்து விற்கப்படும் நிலை உள்ளதாகவும் நெல் அரிசி உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
அண்மைச் செய்தி : “நிலக்கரி ஊழலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” – முன்னாள் அமைச்சர் தங்கமணி
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல் விலை உயர்ந்ததால் விவசாயிகள் ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அரிசியை உணவுக்காக வாங்கி உபயோகிக்கும் சாமானியர்கள் இந்த விலை உயர்வு காரணமாக தற்போது பாதிப்புக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் 75 கிலோ நெல் மூட்டை ஒன்றுக்கு 1200முதல் 1400 ரூபாய் வரை மட்டுமே விற்கப்பட்டது. இந்த ஆண்டு 75 கிலோ மூட்டை ஒன்றுக்கு 1500 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்ற விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வருடம் அரிசியின் விற்பனை 25 கிலோ 850 ரூபாய் முதல் 1050 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 26 கிலோ மூட்டையானது 950 ரூபாய் முதல் 1150 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.







