ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை சட்டமன்றத்தில் வைத்து விவாதித்து அதை முறையாக நிறைவேற்றுவோம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மணமக்கள் ஸ்ரீநிதி –
கெளசிக் தேவ் ஆகியோருக்கு மாலை மற்றும் தாலி எடுத்து கொடுத்து திருமணம் நடத்தி
வைத்து வாழ்த்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் கொடுத்த 70 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேபோல் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி ஓன்று இருக்கின்றது. ஜெயலலிதா மறைவில் மர்மம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் சொன்னார். அவரை சமாதானம் செய்ய ஒப்புக்காக ஒரு கமிஷன் அமைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. திமுக ஆட்சி அமைத்தால் முறையாக விசாரித்து அறிக்கை பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தோம்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை கொடுத்தார். அதில் பல பிரச்சினைகள் இருக்கிறது அதை இப்பொது சொல்ல மாட்டேன். சட்டமன்றத்தில் வைத்து அதில் இருக்கும் பிரச்னைகள் குறித்து முறையாக விவாதித்து அதை நிறைவேற்றுவோம். தூத்துக்குடி சம்பவம் தொடர்பான அறிக்கையும் வந்திருக்கின்றது. அதையும் சட்டமன்றத்தில் வைக்க இருக்கின்றோம். சட்டமன்றத்தில் விவாதித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உறுதி மொழிகள் எதையும் நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிச்சாமி சொல்கின்றார். பெண்களுக்கு இலவச பேருந்து, பால்விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டுள்ளதாக குறிப்பிட்டார். அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், ஸ்மார்ட் வகுப்பறை ஆகிய திட்டம் வருகின்ற 5ம் தேதி டெல்லி முதல்வர் தலைமையில் துவங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை விரைவில் வழங்கப்படும். நிதி நிலைமை சரியானவுடன் வழங்கப்படும் என கூறிய அவர் கலைஞரின் மகன் சொன்னதை செய்வேன் எனவும் அவர் தெரிவித்தார்.