ஆறுகுட்டி போல் பல குட்டிகள் அதிமுகவில் இருந்து வெளிவந்து விட்டது – ஆர்.எஸ்.பாரதி

அதிமுகவில் இருந்து ஆறுகுட்டி வெளியே வந்தது போல் பல குட்டிகள் வெளியே வந்துவிட்டது என்றும், அதிமுகவால் தங்களது குட்டிகளை பாதுகாக்க முடியவில்லை என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாராதி தெரிவித்துள்ளார்.   சென்னை அண்ணா…

அதிமுகவில் இருந்து ஆறுகுட்டி வெளியே வந்தது போல் பல குட்டிகள் வெளியே வந்துவிட்டது என்றும், அதிமுகவால் தங்களது குட்டிகளை பாதுகாக்க முடியவில்லை என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாராதி தெரிவித்துள்ளார்.

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் நிர்வாகம் உட்பட அனைத்திலும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறோம் என்றார். கடந்த தேர்தலில் அதிமுகவின் கோட்டையாக இருந்தது கோவை. ஆனால் தற்போது கோவை மக்கள் திமுக ஆட்சியை வியந்து பாராட்டி தவறு செய்ததை உணர்ந்து உள்ளாட்சியிலும் வெற்றியை தந்துள்ளனர்.

 

கோவையில் ஆச்சரியம் தரும் வகையில் அதிகமானோர் முதலமைச்சருக்கு வரவேற்பு தந்ததை தாங்க முடியாமல் இல்லாது பொல்லாததை எடப்பாடி பழனிசாமி பேட்டியாக கூறியுள்ளார் என சாடினார். திமுக ஆட்சியில் அதிமுகவின் எந்த திட்டத்தையும் கைவிடவில்லை. வேலுமணிக்கு சொந்தமானவர்கள் வளைத்து போட்டுள்ளதால் வெள்ளளூரில் பேருந்து நிலையத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றதாகவும் அவர் கூறினார்.

 

கருணாநிதியை அடக்கம் செய்ய எடப்பாடி வீட்டிற்கு ஸ்டாலினுடன் சென்று மெரினாவில் இடம் கேட்டோம் , அவர்கள் மறுத்தார்கள். நீதிமன்றம் சென்று இரவில் வாதாடி இடம் பெற்றோம். ஆனால் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையே எங்கள் ஆட்சியில் நடத்தி வருகிறோம். தங்களை கோடீஸ்வரர்களாக்கிய ஜெயலலிதாவின் கோடநாடு இல்லத்தையே எடப்பாடி ஆட்சியில் காப்பாற்ற முடியவில்லை.

அண்மையில் ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்பில் தமிழ்நாட்டில் பிற மாநிலத்தை காட்டிலும் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதாகவும், 14 சதவீதம் திருப்தி எனவும்
13 சதவீதம் மட்டுமே திருப்தி இல்லை என்றும் கூறி உள்ளனர். கோவை மாவட்டத்தில் 50 ஆயிரம் பேர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். ஆறு குட்டி போல் பல குட்டிகள் அதிமுகவில் இருந்து வெளிவந்து விட்டது. அதிமுகவில் தங்களது குட்டிகளை பாதுகாக்க முடியவில்லை.

 

எடப்பாடி பழனிசாமி தேதி கொடுத்தால் அவருடன் நான் விவாதிக்க தயார். கட்டுமான பணி நடைபெற்ற வெள்ளலூர் பேருந்து நிலையத்தை விளையாட்டு மைதானம் ஆக்கி 50 ஏக்கர் பரப்பளவையும் மக்கள் பயன்பாட்டுக்கு கொடுப்போம். கோவையில் புதிதாக பேருந்து நிலையம் அமைய உள்ள பகுதியில் திமுக குடும்பத்தினருக்கு சொந்தமான நிலம் இருப்பதாக கூறும் எடப்பாடி , நீதிமன்றம் சென்று அதை தடுக்கட்டும். அவரது குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் ஆட்சியையே கலைக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு எனவே அதை நாங்கள் சந்திக்க தயார் என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.