கலைகள் பொழுது போக்காக இல்லாமல் மனதை மாற்ற வேண்டும்- நம்ம ஊரு திருவிழாவில் முதலமைச்சர்  பேச்சு

மக்கள் தங்களை தனி தீவாக மாற்றிக் கொள்கிறார்கள், அந்த நிலை மாற வேண்டும். மக்கள் மனம் பண்பட்டு இருக்க வேண்டும் என்றால், கலைகள் பொழுது போக்காக இல்லாமல் மனதை மாற்றும் நிகழ்வாக இருக்க வேண்டும்…

மக்கள் தங்களை தனி தீவாக மாற்றிக் கொள்கிறார்கள், அந்த நிலை மாற வேண்டும். மக்கள் மனம் பண்பட்டு இருக்க வேண்டும் என்றால், கலைகள் பொழுது போக்காக இல்லாமல் மனதை மாற்றும் நிகழ்வாக இருக்க வேண்டும் என முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் கலை மற்றும் பண்பாட்டு துறை சார்பில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா தொடக்க நிகழ்ச்சி தீவித்திடலில் நடைபெற்றது. இன்று முதல் 17ஆம் தேதி வரை சென்னையின் பல்வேறு இடங்களில் இந்த நம்ம ஊரு திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் தொடங்கி வைத்து முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது..

”உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் பண்டிகை  வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். ஒரு திருவிழாவில் எப்படி எல்லாரும் பங்கேற்பார்களோ அப்படித்தான் இங்கே எல்லோரும் பங்கேற்றுள்ளார்கள். அரசு வேலைகள் நிறைய இருந்தாலும் இந்த திருவிழாவை காணுவதற்கு நான் ஆர்வத்துடன் இருந்தேன் அப்படித்தான் என்னுடன் வந்திருக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

திராவிட இயக்கம்தான் சாமானிய மக்கள் மொழியை பேசியது. கலைஞர் வழி நடத்தும் அரசு அதனால்தான் கலைகளின் அரசாக உள்ளது. கலைகள் வளர வேண்டுமென்றால் கலைஞர்கள் வாழ வேண்டும் அதற்கு அவர்களுக்கு கலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

கொரோனா தொற்றின் போது வீட்டில் இருந்த கலைஞர்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களில் மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

500 நாட்டுப்புற கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் ஆடைகள் தருவதற்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்க 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கலை மாமணி விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மூத்த கலைஞர்களுக்கும் பொற்கிழியாக வழங்கப்படும் தொகை 50,000 இருந்து 1 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

திறமை மிக்க இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வழங்கப்படும் மாவட்ட கலை மன்ற விருதுகளை 5 லிருந்து 15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பாக சென்னை மற்றும் மற்ற 10 மாவட்டங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் பயன்பெற மூன்று கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மக்கள் தங்களை தனி தீவாக மாற்றிக் கொள்கிறார்கள், அந்த நிலை மாற வேண்டும். மக்கள் மனம் பண்பட்டு இருக்க வேண்டும் என்றால், கலைகள் பொழுது போக்காக இல்லாமல் மனதை மாற்றும் நிகழ்வாக இருக்க வேண்டும்.” என முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.