22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்சை வீழ்த்தி 3-வது முறையாக உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் வீரர்களுக்கு நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
கத்தாரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை வென்று உலக கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் இன்று தாயகம் திரும்பினார். நாடு திரும்பிய அர்ஜென்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த காட்சியானது, மக்களின் மகிழ்ச்சி வெள்ளத்தில் அர்ஜென்டினா வீரர்கள் மிதந்து செல்லவது போன்று இருந்தது. 3வது முறையாக உலக கோப்பையை அர்ஜெடினா வென்றது அந்நாட்டு மக்களை உற்சாக கடலில் ஆழ்த்தியது. பொதுமக்களின் ஆரவார வரவேற்பு விண்ணை முட்டும் அளவிற்கு இருந்தது. இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே அர்ஜென்டினா அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்ஸி உலக கோப்பையுடன் உறங்கிய புகைப்படம் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை பெற்று முதலிடம் வகித்து வருகிறது.