தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 4ந்தேதி நடைபெற உள்ளது.
தமிழக அமைச்சரவை கடந்த 14ந்தேதி விரிவுபடுத்தப்பட்டது. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்றார். அவரையும் சேர்த்து 35 பேர் கொண்ட அமைச்சரவையாக தமிழக அமைச்சரவை விளங்குகிறது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் வரும் 4ந்தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ள நிலையில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் உள்ளிட்டவை குறித்தும், சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது தாக்கல் செய்ய வேண்டிய மசோதாக்கள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.







