சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியா? தேவசம் போர்டு விளக்கம்

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கலாம் என வழிகாட்டு நெறிமுறைகளில் இருந்ததற்கு தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.   சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.…

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கலாம் என வழிகாட்டு நெறிமுறைகளில் இருந்ததற்கு தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

 

சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தியதால், இந்த உத்தரவை அமுல்படுத்துவதில் கேரள அரசு தயக்கம் காட்டி வந்தது. இந்த நிலையில் இந்த வருடத்திற்கான மண்டல பூஜைக்கு நடை திறந்து உள்ள நிலையில் போலீசாருக்கு வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறை புத்தகத்தில் 2018 நீதிமன்றம் தீர்ப்பின்படி அனைத்து பக்தர்களையும் ஐயப்ப தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு, ஐயப்ப பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்ததை தொடர்ந்து, கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அதில், தவறுதலாக அச்சிடப்பட்டு இந்த வழிகாட்டி நெறிமுறை வழங்கப்பட்டுள்ளது என விளக்கமளித்தார். இந்த வழிகாட்டு நெறிமுறை புத்தகம் அனைத்தையும் திரும்ப பெற்றுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள 10 வயதுக்கு கீழும் 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சபரிமலையில் பெண்களை அனுமதித்தால், கோயிலின் ஐதீகம் பாதிக்கப்படும் என்று தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.