என் ஹோட்டல்களில் ஐடி ரெய்டா? – நடிகர் ஆர்யா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல்!

சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் அவர் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல் ஒன்றை அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் அறிந்தும் அறியாமலும், சர்வம், நான் கடவுள், ஆரம்பம், மதராசப்பட்டினம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகை சயீஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இவர் நடிப்பு மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட், உணவகம் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட தொடங்கியதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிப்பை விடவும் தொழிலில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. நடிகர் ஆர்யாவுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் Sea Shell என்ற பெயரில் ஏராளமான உணவகங்கள் இயங்கி வருவதாக தெரிகிறது. இந்த சூழலில் சென்னையில் உள்ள சீ ஷெல் ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை திடீரென சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது. வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு நடந்ததாகவும் நடிகர் ஆர்யா மீது புகார் எழுந்ததால், இந்த சோதனை நடந்து வருவதாக சொல்லப்பட்டது.

சென்னை அண்ணாநகர், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இந்த தகவல் குறித்து நடிகர் ஆர்யாக நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சென்னையில் ஐ டி ரெய்டு நடக்கும் ஹோட்டலுக்கும் எனக்கும் சம்பந்தமும் இல்லை. அந்த ஹோட்டல் உரிமையாளர் வேறு ஒருவர்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.