இடிந்து விழும் நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதால் உயிர்பயத்தில் வாழ்வதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள THE WESTMINSTER என்ற நிறுவனம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழும் நிலையில் இருப்பதாக அக்குடியிருப்புவாசிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்
THE WESTMINSTER எனும் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வீடுகளை விற்பனை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை சாலிகிராமத்தில் 2015ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டியது. 600க்கும் அதிகமான வீடுகளை கொண்ட அந்த குடியிருப்பில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் THE WESTMINSTER குடியிருப்பில் உள்ள வீடுகளின் பக்கவாட்டு சுவர்கள், மேற்பூச்சு ஆகியவை உடைந்து விழுவதால் குடியிருப்புவாசிகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். THE WESTMINSTER நிறுவனம் தரமற்ற முறையில் வீடுகளை கட்டி விற்பனை செய்திருப்பதாக குடியிருப்புவாசிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலை இருப்பதால் உடனடியாக நேரில் வந்து விசாரணை நடத்தி தரமற்ற குடியிருப்புகளை கட்டிய நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நியூஸ் 7 தமிழிடம் தொலைபேசி வாயிலாக பேசிய விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா, நேரில் சென்று ஆய்வு செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.







