ஜெயிலர் பட ரிலீஸை முன்னிட்டு, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள சில தனியார் அலுவலகங்கள் விடுமுறை அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். ஆக்ஷன் படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஆகஸ்ட்10-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
இறுதியாக “அண்ணாத்த” படத்தில் ரஜினி ரசிகர்கள் அவரை திரையில் பார்த்தனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி நடிப்பில் திரைக்கு ஒரு படம் வரவிருப்பது, அவரது ரசிகர்களுக்கும் சரி, சினிமா ரசிகர்களுக்கும் சரி நிச்சயம் ஒரு கொண்டாட்டமாகவே இருக்கும்.
இந்நிலையில் அதனை மேலும் கொண்டாடும் வகையில், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில், பல தனியார் நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 10-ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது. இது பற்றி தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அனுப்பிய விடுமுறை அறிவிப்பும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே, ரஜினி ரசிகர்கள் பலரும் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆவதை முன்னிட்டுக் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். இந்த வேளையில் இதுபோன்ற நிகழ்வுகள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு மேலும் வழிவகை செய்வதாக அமைந்துள்ளது. தொடர்ந்து இதுபோன்ற செய்திகள் வந்தபடி உள்ளன.







