கோயிலின் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி 2018ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அங்கு பணிபுரிந்துவந்த முத்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
ஆகமத்தின் அடிப்படையிலான கோயிலுக்கு அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதிகள், ஆகமத்தின் அடிப்படை இல்லை எனக் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ஒரு கோயிலின் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்ற, யாராக இருந்தாலும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தீர்ப்பளித்திருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து முத்து சுப்பிரமணிய குருக்கள் சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு டிவிசன் அமர்வும் இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததையடுத்து, முத்து சுப்ரமணிய குருக்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பர்திவாலா அமர்வு முத்து சுப்ரமணிய குருக்களின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்தது.







