சந்திரயான் குறித்த பதிவு – நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

சந்திரயான் குறித்த பதிவு சர்ச்சையாக்கப்பட்ட நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். ‘சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட் ஜூலை 14 ஆம்…

சந்திரயான் குறித்த பதிவு சர்ச்சையாக்கப்பட்ட நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

‘சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட் ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

நிலவுக்கு மிக நெருக்கமான, இறுதிக் கட்ட சுற்றுப்பாதையில் வலம் வரும் சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து லேண்டா் கலன் கடந்த 17ஆம் தேதி விடுவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான் – 3  நிலவில் தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தற்போது தீவிரம் காட்டி வருகிறது. நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கான பணிகள் ஆக.23-ஆம் தேதி மாலை 6.04 மணியளவில் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த நிலையில் சந்திரயான் 3 குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு ஒன்று பெரும் சர்ச்சையில் சிக்கியது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி வில்லனாகவும், பல குணச்சித்திர வேடங்களிலும், மேலும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். அவர் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். இவர் சந்திரயான் படத்தை வைத்து அதில் பிரேக்கிங் நியூஸ் என பதிவிட்டு, நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம் என குறிப்பிட்டு, டீ மாஸ்டர் ஒருவர் தேநீர் தயாரிக்கும்படியான  கார்ட்டூன் இமேஜை பதிவிட்டிருந்தார்.

நடிகர் பிரகாஷ் ராஜின் பதிவிற்கு பலரது மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் பதிவிற்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது..

“எனது பதிவை ட்ரோல் செய்பவர்களுக்கு ஒரே ஒரு “டீ விற்பவரை ( சாய்வாலா)” மட்டுமே தெரியும். ஆனால் 1960-ல் இருந்து எங்களது பெருமைக்குரிய கேரள டீக்கடைக்காரரைப் பற்றி நாங்கள் பேசி வருகிறோம். நீங்கள் படித்தவர்களாக ஆக வேண்டும் எனில் இதனைப் படியுங்கள்” என ஒரு செய்தியின் லிங்கை அப்பதிவுடன் இணைத்துள்ளார்.

அந்த செய்தியில் அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங்க் நிலவிற்கு சென்றபோது அங்கே ஒரு கேரள டீக்கடைக்காரர் கடை வைத்திருந்தது குறித்து நீல் ஆம்ஸ்ட்ராங் ஆச்சரியம் அடைந்துள்ளார். அடுத்தமுறை நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றபோது அங்கே அவரை காணவில்லை. இதுபற்றி நிலவில் உணவகம் நடந்தி வந்த சர்தார்ஜியிடம் ஆம்ஸ்ட்ராங் விசாரித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த சர்தார்ஜி “ கேரள டீக்கடைக்காரர் தற்போது புளூட்டோவிற்கு சென்று விட்டார். அங்கே நல்ல வரவேற்பு மற்றும் இவரது திண்பண்டங்களுக்கு நல்ல விற்பனை இருப்பதால் அங்கு சென்றுவிட்டதாக சர்தார்ஜி தெரிவித்துள்ளார்”. இந்த நகைச்சுவை அடங்கிய செய்தியை பிரகாஷ் ராஜ் பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.