சென்னையில் மீண்டும் ஒரு சம்பவம்… காவலர் குடியிருப்பில் சிறுவனை கடித்த நாய்!

சென்னையில் 5 வயது சிறுமியை நாய் கடித்த சம்பவம் அடங்குவதற்குள்,  காவலர் குடியிருப்பில் சிறுவன் ஒருவனை நாய் கடித்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த சிறுவன் அஸ்வந்த் பள்ளி விடுமுறையை…

சென்னையில் 5 வயது சிறுமியை நாய் கடித்த சம்பவம் அடங்குவதற்குள்,  காவலர் குடியிருப்பில் சிறுவன் ஒருவனை நாய் கடித்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த சிறுவன் அஸ்வந்த் பள்ளி விடுமுறையை முன்னிட்டு,  ஆலந்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளான்.  இந்நிலையில் நேற்று மாலை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் உள்ள அவரது அத்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அஸ்வந்தை,  அதே பகுதியில் உள்ள வளர்ப்பு நாய் ஒன்று கடித்துள்ளது.  இதில் சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

அஸ்வந்தின் அத்தை,  மாமா வேலைக்கு சென்றிருந்த நிலையில்,  அருகில் இருந்தவர்கள்
நாயிடமிருந்து அவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.  பின்னர் சிறுவனை கடித்த நாய் சைபீரியன் ஹஸ்கி வகையைச் சேர்ந்தது என்றும்,  அதே
குடியிருப்பில் வசிக்கக்கூடிய வேறு ஒரு காவலர் அந்த நாயினை வளர்ப்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இதுதொடர்பாக அஸ்வந்தின் அத்தை,  மாமா புனித தோமையர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு,  நுங்கம்பாக்கம் பகுதியில் 5 வயது சிறுமியை நாய் கடித்து அவர் சிகிச்சை பெற்று வரக்கூடிய சூழ்நிலையில்,  தற்பொழுது காவலர் குடியிருப்பில் அதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.