புதுக்கோட்டை அருகே குடிநீரில் சாணம் கலந்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மேலே ஏறிச் சென்று பார்த்த இளைஞர்கள் மாட்டுச்சாணம் கலந்திருப்பதாகத் தெரிவித்தனர்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அந்தத் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரி, ஆய்விற்காக பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், நீர் தேக்க தொட்டியில், மாட்டு சாணம் கலக்கவில்லை என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பகுடியை சேர்ந்த சண்முகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதில், அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கை வேறு விசாரணை அமர்வுக்கு மாற்றுவதோடு அந்த கிராமத்தை சேர்ந்த குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், தனபால் ஆகியோர் அமர்வில் விசாரனைக்கு வந்தது. இந்நிலையில், அரசு தரப்பில் கூறியதாவது : “சங்கம் விடுதி கிராமத்தில் அனைத்து சமூதாய மக்களும் ஒற்றுமையுடனேயே வாழ்கின்றனர். சாணம் கலக்கப்பட்டதாக கூறப்படும் நீரின் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டத்தில் சாணம் எதுவும் கலக்கப்படவில்லை, அந்த நீரில் பாசியே காணப்பட்டுள்ளதாக ஆய்வில் கூறினர்” என தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் : “வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள்” – தேர்தல் ஆணையம் தகவல்!
இதற்கு நீதிபதிகள் குடிநீர் தொட்டியில் பாசி எவ்வாறு வந்தது. பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகள் இவ்வாறு தான் பராமரிக்கப்படுகின்றனவா என கேள்வியெழுப்பினார். இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.








