“வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள்” – தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு மற்றும்…

தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு
அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல்
19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.  தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்,  வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் நீலகிரி மக்களவை தொகுதியில் உள்ள ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தன. பின்னர் அது சரி செய்யப்பட்டது.

அதேபோல ஈரோடு, விழுப்புரம் தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளில்
பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களும் சிறிது நேரத்திற்கு செயலிழந்தன. பின்னர் அவை சரி செய்யப்பட்டன.  இதனையடுத்து இதுசம்பந்தமாக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி,  வழக்கறிஞர் எம்எல் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.  தேர்தல் ஆணையம் தரப்பில், கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தது குறித்து அறிக்கை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  மேலும் கூடுதல்
கேமராக்களை பாதுகாப்பு அறைகளில் நிறுவும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு
அறிவுறுத்தியதாக விளக்கம் அளிக்கப்பட்டது.  இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.