ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவை சேர்ந்த அண்ணு ராணி தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். இது இந்தியாவின் 15வது தங்கம் ஆகும்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கி அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சீனா, ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஈரான், கஜகஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்றுள்ளன. இன்று நடைபெற்ற மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவை சேர்ந்த அண்ணு ராணி தங்கம் வென்று அசத்தியுள்ளார். இவர் 66.82 மீட்டர் ஈட்டி எறிந்து அசத்தியுள்ளார்.
பெண்களுக்கான ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையையும், இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு 61.86 மீட்டர் தூரம் எறிந்து 60 மீட்டர் தூரத்தைக் கடந்த முதல் இந்தியப் பெண் என்ற வரலாறு படைத்தார்.
இவர் 2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஈட்டி எறிதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றிருந்தார். கூடுதலாக, 2022 இல் நடைபெற்ற இந்திய ஓபன் ஈட்டி எறிதல் போட்டியில் 63.82 மீட்டர் தூரம் எறிந்து, இதுவரை இந்திய அளவிலான சாதனையாளர் என்ற புகழையும் அவர் பெற்றுள்ளார்.
அண்ணு ராணி பெற்ற முதல் தங்கம் இந்தியாவின் கணக்கில் கிடைத்த 15வது தங்கமாகும். இந்தியா தற்போது 15 தங்கம், 26 வெள்ளி, 28 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.







