அன்னபூரணி திரைப்பட விவகாரம் – வருத்தம் தெரிவித்த நயன்தாரா..!

அன்னபூரணி திரைப்பட விவகாரம் குறித்து நடிகை நயன்தாரா வருத்தம் தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் ‘அன்னபூரணி’. நடிகர் ஜெய் கதாநாயகனாக…

அன்னபூரணி திரைப்பட விவகாரம் குறித்து நடிகை நயன்தாரா வருத்தம் தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் ‘அன்னபூரணி’. நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதையும் படியுங்கள் : இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!

இதையடுத்து, இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு. மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. ஓ.டி.டி வெளியீட்டிற்கு பிறகு இந்த திரைப்படம் பல்வேறு சர்ச்சைக்குள்ளானது. இதனால் இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில், ‘அன்னபூரணி’ திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா வருத்தம் தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து நடிகை நயன்தாரா தனது சமூக வலைதளத்தில் தெரிவித்ததாவது; “வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.’அன்னபூரணி’ திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே ‘அன்னபூரணி’ திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம்.

‘அன்னபூரணி’ வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம். மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.

அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ‘அன்னபூரணி’  படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்”

இவ்வாறு நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.