உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு…!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார்.

பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த 2025 ஏப்ரல் மாதம் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். தொடர்ந்து அப்பொறுப்பில் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

2026 சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடாத அண்ணாமலை, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். மேலும் கட்சியில் அவரது ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதற்கிடையில் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய இயக்கம் ஒன்றை தொடங்க உள்ளதாகவும் பிற்காலத்தில் அந்த இயக்கம் கட்சியாக மாற்றப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தகவல்களின் படி, அக்கட்சிக்கு ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்று பெயர் சூட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் அண்ணாமலைக்கு மீண்டும் மாநில தலைவர் பதவியோ அல்லது எம்.பி. பதவியோ அளித்து அவரை கட்சியில் தக்க வைத்து கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் டெல்லியில் உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை, அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக அவர் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.