அண்ணாமலை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாக தெரிவித்துள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுகவின் சொத்து பத்திரங்களை 15 நாட்களுக்குள் அண்ணாமலை வெளியிட வேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரஃபேல் கைக்கடிகாரம் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்த ரஃபேல் கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.4 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்றும், தன்னை விவசாயி எனக் கூறிக்கொள்ளும் அண்ணாமலையால் இந்த வாட்ச்சை எப்படி வாங்க முடிந்தது எனவும் திமுகவினர் கேள்வியெழுப்பினர். குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த விவகாரத்தை முன்வைத்து அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்ததோடு, ரஃபேல் கைக்கடிகாரத்திற்கான பில்லை வெளியிடுமாறும் அவர் கூறி வந்தார்.
இந்த நிலையில், இப்பிரச்சனை தொடர்பாக, பாஜக தலைமையகத்தில் இன்று அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காலையில் ஒரு நாடகம் அரங்கேறியது. ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளை கூட அண்ணாமலை சொல்லவில்லை. சாலமன் பாப்பையா பட்டிமன்றம் பார்ப்பது போல தான் அண்ணாமலை பேட்டி உள்ளது. அதை பார்த்து சிரிக்க தான் தோன்றுகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அண்ணாமலை அளிக்க வேண்டும். தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையே முன் வைக்கிறார். ஒவ்வொருவரும் நீதிமன்றத்திற்கு சென்றால், அண்ணாமலை பதில் சொல்ல வேண்டி வரும். அப்படி அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டால் அண்ணாமலை சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாது. பிறகு அவர் நீதிமன்றத்தை சுற்றும் நேரம் தான் அதிகமாக இருக்கும். இன்று அண்ணாமலை, ரஃபேல் வாட்சுக்கான பில்லை காட்டவில்லை. சீட்டை காட்டி சீட்டிங் செய்துள்ளார் என்று கடுமையாக விமர்சித்தார்.
பின்னர், திமுக அமைச்சர்கள் தேர்தலின் போதே, சொத்து பட்டியலை கொடுத்துள்ளனர். நாங்கள் திறந்த புத்தகம். எதை பற்றியும் எங்களுக்கு கவலையில்லை. அதனால் திமுகவுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. அண்ணாமலை போன்று எத்தனையோ பேரின், சவால்களை சந்தித்து உள்ளோம். எம்.ஜி.ஆர் காலத்தில் கூட ஊழல் வழக்கு போட முடிந்தது. ஆனால் நிரூபிக்க முடியவில்லை. எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை விட அண்ணாமலை ஒன்றும் பெரிய ஆளுமையில்லை. ஆருத்ரா மோசடியில் தனக்கும் பங்கிருப்பதை திசைதிருப்பவே அண்ணாமலை இப்படியெலலாம் நாடகமாடுகிறார். திமுகவின் ரூ.1408 கோடிக்கான சொத்து பத்திரங்களை 15 நாட்களுக்குள் அண்ணாமலை தர வேண்டும். இல்லையென்றால், அண்ணாமலை மீது உறுதியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் சிபிஐயை கண்டு ஒருபோதும் அஞ்ச மாட்டோம். சிபிஐ வழக்கு தொடுத்தால் நாங்கள் சந்திக்க தயார்.
- பி.ஜேம்ஸ் லிசா










