நீட் விவகாரத்தில் திமுகவிற்கு சவால் விடுத்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சட்டப்பேரவையில் திமுக சேது சமுத்திர திட்டத்திற்கு முக்கிய தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. ராமர் பாலத்திற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. சேது சமுத்திரத் திட்டம் குறித்து 2008ல் இருந்து பேசிக் கொண்டிருக்கிறோம். 2008ல் கொண்டு வந்த தீர்மானத்தின் படி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம். 58 கிலோமீட்டர் தொலைவு உள்ள ராமர் பாலத்தை சேதப்படுத்தக் கூடாது.
மார்ச் 2018ல் மத்திய அரசு தெளிவாகச் சொல்லி இருக்கிறது. சேது சமுத்திர திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு யோசித்து வருகிறது. முதலமைச்சருக்கு நினைவுபடுத்த வேண்டிய தேவை பாரதிய ஜனதா கட்சிக்கு இருக்கிறது. சேது சமுத்திரத் திட்டத்தால் பயன்பெறப்போவது மீனவர்கள் கிடையாது. திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலுவும், கனிமொழியுமே பயன்பெறுவார்கள். மீனவர்களுக்கும் தொழில் முனைவர்களுக்கும் சேது சமுத்திரத் திட்டத்தால் எந்த பயனும் இல்லை.
முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் சரியில்லை. பல பொய்யான தகவல்களை தீர்மானத்தில் கொண்டு வந்திருக்கிறார். ஆர்.கே.பச்சோரி அவர்கள் குழு கொடுத்த அறிக்கை எந்தவிதமான பயனையும் தராது என்று தெளிவாக சொல்லி இருக்கிறது. பொருளாதார ரீதியில் எந்த பயனும் இல்லை என்று பச்சேரி குழு அறிக்கை கொடுத்துள்ளது. இரண்டு நிறுவனங்கள் நடத்தும் கப்பல் நிறுவனத்திற்காக இது கொண்டு வரப்படுகிறது. ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் சொல்லிய கருத்தை மக்களுக்கு கொண்டு வருவது எனது கடமை.
18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சேது சமுத்திரத் திட்டம் 4ஏ என்றால் அதை பாரதிய ஜனதா கட்சி கடுமையாக எதிர்க்கும். எந்த திட்டத்தின் கீழ் சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். ராமர் பாலம் குறித்து ஆராய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு பின்பே அது குறித்து தெளிவாக சொல்ல முடியும். அரசியல் காரணத்திற்காக சேது சமுத்திரத் திட்டம் நிறுத்தப்பட்டதாக முதலமைச்சர் கூறுவது தவறானது.
காவல்துறையை எனது கட்டுப்பாட்டில் கொடுத்தால் ஏழு நாட்களுக்குள் சுபஸ்ரீயின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதை சொல்லிவிடுவேன். புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். காவல்துறை கண்டுபிடித்த பின்னரும், புதுக்கோட்டை விவகாரத்தில் சொல்லக்கூடாது என்று தமிழக அரசு நிர்பந்திக்கிறதா? சுபஸ்ரீ கொலையிலும் விபரங்கள் தெரிந்த பின்பும் சொல்லக்கூடாது என்று காவல்துறைக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கிறதா?
பத்திரிக்கையாளர்கள் கவர்னரை வேலை செய்யவிடவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது ஒரு நியாயம். முதலமைச்சராக இருக்கும்போது ஒரு நியாயமா? பல்வேறு திட்டங்களுக்கு மானியம் கொடுப்பது மத்திய அரசு. ஆனால் பிரதமர் மோடியின் படத்தை எங்கும் தமிழ்நாடு அரசு பயன்படுத்தவில்லை. கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழ்நாடு அரசின் சின்னத்தை பயன்படுத்தாதது கிளெரிக்கல் எரர்.
ஆளுநர் அரசியலைப் பற்றி பேசுவதில் என்ன தவறு இருக்கிறது. என்னை கேட்டால் தமிழ்நாடும் ஒன்று, தமிழகமும் ஒன்று. ஆளுநர் எந்த உணர்வையும் தூண்டி பேசவில்லை. ஆளுநரை எதிர்த்து பேச வேண்டும் என்ற அரசியலை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். முதலமைச்சர் ஆளுநருடன் இணக்கமாக செயல்பட வேண்டும். பெரிய பெரிய ஆளுமைகள் திமுக கட்சியில் இருந்திருக்கின்றன.
கலைஞர் கருணாநிதி, அண்ணா போன்ற ஆளுமைகள் இருந்த கட்சியிலிருந்து வந்த முதலமைச்சர், மம்தா பானர்ஜி போன்று நடந்து கொள்ளக் கூடாது.
சட்டப்பேரவையில் வன்முறை கலாச்சாரத்தை கொண்டு வந்தது திமுக. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்காது. திமுகவிற்கு சவால் விடுகிறேன். உச்சநீதிமன்றம் செல்லுங்கள். நீட் தேர்வு குறித்து திமுக பேசுவது விதண்டாவாதம். ஆன்லைன் ரம்மி தடை பண்ண வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு. ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் திமுக கொடுத்த மசோதா தவறாக இருக்கிறது.
ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்தால், திமுக அரசியல் என்ன என்பது வெளிவரும். ஆளுநரை மக்களோடு உரையாட வைத்துவிடாதீர்கள். முதலமைச்சர், தனது சகாக்களை பிரச்னை செய்யக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். முதலமைச்சர் 2021ல் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. மத்திய அமைச்சர் எல்.முருகன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார்” என்றார்.








