ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
அங்கன்வாடி பணியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கோடை விடுமுறை வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் அருகே 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் இடையே கும்மியடித்து கவனம் ஈர்த்த அவர்கள், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என கூறினர்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன், அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமானோர் பங்கேற்று, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இதேபோல், செங்கல்பட்டு, அரியலூர், தூத்துக்குடி, திருவாரூர் உள்பட பல்வேறு இடங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.







