ஆந்திரா மாநில எல்லைகளின் பல்வேறு பகுதிகளில் இருந்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை போலீசார் அழித்தனர்.
தென்மாநிலங்களில் மற்ற மாநிலங்களை ஓப்பிடுகையில் ஆந்திராவில் மது வகைகளின் விலை அதிகமாகவே உள்ளது. எனவே சமூக விரோதிகள் சிலர் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மது வகைகளை கடத்தி வந்து விற்பனை செய்வது தொடர்கதையாக உள்ளது. எனவே ஆந்திர அரசு சிறப்பு போலீசாரை நியமித்து சட்டவிரோத மது கடத்தலை தடுக்க பல அதிரடி நடவடிக்ககைகளை மேற்கொண்டு வருகிறது.
மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகளை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள பலமனேரு பகுதியை சேர்ந்தவர்கள் கடத்தலில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளநிலையில் போலீசாரின் தீவிர சோதனையில் அவ்வப்போது மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடக மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு சித்தூர் மாவட்டத்தின் பலமனேரு உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ.12,26,230 மதிப்பிலான மது பாட்டில்கள், ரூ.23,761 மதிப்பிலான மது பாக்கெட்டுகள் உள்ளிட்ட போதைப்பொருட்களை மதனப்பள்ளியில் உள்ள மைதானத்தில் போலீசார் கனரக இயந்திரத்தை ஏற்றி அழித்தனர்.
–வேந்தன்







