ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில்வீடியோ பரவிய நிலையில் அசாம் மாநில அதிகாரிகள் யானையை ஆய்வு செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து கடந்த 2011ஆம் ஆண்டு பெண் யானை கொண்டு வரப்பட்டது. இதற்கு ஜெயமாலியதா என்ற பெயரும் சூட்டப்பட்டது. யானையை கோவில் மண்டபத்தில் வைத்து வளர்க்கப்பட்டு வந்த நிலையில் யானை தினசரி ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசித்துவிட்டு வீதி உலா புறப்பட்டு நிகழ்ச்சிக்கு வந்து சேரும்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேக்கம்பட்டியில் புத்துணர்வு முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் வைத்து யானை தாக்கப்பட்டதை தொடர்ந்து யானை பாகன்கள் இரண்டு பேர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.புதிய பாகன்கள் நியமிக்கப்பட்டு யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் யானை தாக்கப்படுவதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோ பரவுகிறது.இந்நிலையில் தற்போது 10 லட்ச ரூபாய் செலவீடு செய்து யானைக்காக கிருஷ்ணன் கோவில் தனியார் மண்டபத்தில் நவீன வசதிகளுடன் பெரிய மின்விசிறி மற்றும் குளிப்பதற்கு ஷவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து யானை தாக்கப்பட்டதாக அடிக்கடி சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில் அசாம் மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட யானையை அம்மாநில அதிகாரிகள் வந்து யானையை ஆய்வு செய்தனர்.யானையை ஆய்வு செய்யும் பொழுது கோயில் கதவுகளை மூடி வைத்து அதிகாரிகள் மட்டுமே ஆய்வு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆண்டாள் கோயில் யானையை அசாம் மாநிலத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.







