முதலமைச்சர் அறிவுறுத்தல் பேரிலேயே அதிமுக அலுவலகத்தில் தாக்குதல்: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் பேரிலேயே அதிமுக அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார். சென்னை கிரீன்வேஸ் சாலை எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.…

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் பேரிலேயே அதிமுக அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார்.

சென்னை கிரீன்வேஸ் சாலை எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள், குண்டர்கள், ரவுடிகள், போலீஸ் பாதுகாப்போடு அலுவலகத்தைத் தாக்கினர்.

தலைமைக் கழக பிரதான வாயிலை உடைத்து அடித்து சேதப்படுத்தியதை ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பின. அன்றே புகார் அளித்த நிலையில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தது. தொடரப்பட்ட வழக்கில் சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த அறை முழுவதுமாக அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டது.

திமுக தான் நடந்த சம்பவத்திற்கு முழு காரணம். அதற்கு துணையாக இருந்த காவல் துறை, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம்.

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக சொன்னார்கள். ஆனால் இன்று வரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சம்பவத்திற்கு முதல் குற்றவாளி காவல் துறை, குற்றம்சாட்டப்பட்டவர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதாரம் இருந்தும் வழக்குப் பதிவு செய்யவில்லை.

53 நாட்களாக அந்த அலுவலகம் அப்படியே இருக்கிறது. நீதிமன்ற உத்தரவுப்படி நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை.

உன் வீடாக இருந்தாலும் திருடினால் திருடன் தான். அது உங்கொப்பன் வீட்டு சொத்து அல்ல என ஓ.பன்னீர்செல்வம் மீது தாக்கு காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

15 மாத கால ஆட்சியில் கொலை, கொள்ளை சட்டம் ஒழுங்கு சீரழிந்து இருக்கிறது. தமிழக காவல்துறை திமுகவின் தொண்டர் படையாக மாறிவிட்டது என்றார் சி.வி.சண்முகம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.