பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்கு முந்திய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி, உடுமலை மற்றும் அமராவதி உள்ளிட்ட 6 வன சரகங்கள் உள்ளன. இதில் காட்டு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு மாடு உள்ளிட்ட அரிய வகையான விலங்குகள் பறவைகள் உள்ளன.
ஆண்டுதோறும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மழைக்கு முந்திய வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மழைக்கு முந்திய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.
மே 29-ம் தேதி வரை 8 நாட்களுக்கு நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் பொள்ளாச்சி வனக்கோட்டதிற்கு உட்பட்ட 4 வனச்சரகத்தில் 62 நேர்கோட்டுப் பாதை அமைக்கப்பட்டு 248 வனத்துறை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பில் மாமிச உண்ணி, தாவர உண்ணி சார்ந்த வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள், நகக்கீறல்கள் ஆகியவை சேகரிக்கப்பட உள்ளன.
முதல் 3 நாட்களுக்கு மாமிசம் மற்றும் தாவர உண்ணி வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அடுத்த மூன்று நாட்களுக்கு வனவிலங்குகளுக்கு தேவையான தாவரங்கள் ஆகியவை கணக்கிடப்பட உள்ளன. இவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு என்று ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







