ஒருவர் வாழ்நாளில் சேமித்து வைக்க வேண்டியது என்றால் அது முதலில் நல்ல நினைவுகளை தான்… அது பிறருக்காக செய்யக் கூடிய உதவிகளாக கூட இருக்கலாம்… அந்த வகையில் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றி அவர்களின் கல்வி கனவை மேம்படுத்த வேண்டும் என்று ரூ.1 கோடியே 81 லட்சத்தை நிதியாக வியாபாரி ஒருவர் வழங்கியிருக்கிறார் என்றால் சும்மாவா..? அந்த மனசு தான் கடவுள்… மதுரை மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த நிதி அளித்த அந்த முதியவர் யார்? அவரை ஏன் நேரில் சென்று சந்தித்தார் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா.? போன்ற சுவாரஷ்யமான நிகழ்வுகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…
பணம் யாரிடம் இருக்கிறது என்பது முக்கியமல்ல.. அது எப்படி பயன்படுகிறது என்பது தான் முக்கியம்.. அதுவே ஒருவரது குணத்தை தீர்மானிக்கும். அந்த வகையில் இங்கு ஒருவர் தான் படிக்கவில்லை என்றாலும், மற்றவர்களாவது அனைத்து வசதிகளோடும் நன்கு படிக்க வேண்டும் என்று தன் வியாபாரத்தில் சேமித்து கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை அரசு மாநகராட்சி பள்ளிகளுக்கு நன்கொடையாக அளித்து அங்கு படிக்கும் ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளார். அவர் வேறு யாருமல்ல.. மதுரை தத்தனரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தான்.
86 வயதிலும், ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ராஜேந்திரன் அப்பளம், மோர் மிளகாய், வத்தல், வடகம் ஆகியவற்றை வியாபாரம் செய்து வருகிறார். விருதுநகரை சொந்த ஊராக கொண்ட இவர் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர், விருதுநகரில் ஒரு பூண்டு கடையில் 25 ரூபாய் மாத சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்துள்ளார். உழைத்து கிடைத்த பணத்தை உதாரித்தனமாக செலவு செய்யாமல் சிறுக சிறுக சேமித்த ராஜேந்திரன் 300 ரூபாய் பணத்துடன் 1951-ம் ஆண்டு மதுரைக்கு வந்துள்ளார்.
மதுரை வந்த அவரை அந்த மண் கைவிட்டுவிடவில்லை. அரிசி வியாபாரத்தில் தொடங்கிய இவரது தொழில் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து காய்கறி வியாபாரம்… மோர் மிளகாய்.. வற்றல்… அப்பளம் என விரிவடைந்துள்ளது. அதோடு அவரது வாழ்க்கையிலும் பொருளாதார அளவில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முதலில் சைக்கிள் வியாபாரத்தை தொடங்கியவர்., பின்னர் இரு சக்கர வாகனம் வாங்கி அதில் தனது தொழிலை மேம்பட செய்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் பிறக்க, அவர்களின் தன் தொழில் வளர்ச்சியில் கிடைத்த பணத்தை வைத்து, நன்கு படிக்க வைத்து நல்ல இடங்களில் திருமணம் செய்து வைத்துள்ளார். மகள்கள் மூன்று பெரும் நல்ல நிலையில் இருப்பதாலும், நம்மளை நாமளே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தள்ளாத வயதிலும் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறார். இவரது ஆண்டு வருமானம் 50 லட்சம் என்கிற அளவில் இருக்கும் என்கிறார்கள். அப்படி ஓடி சம்பாதிக்கும் பணத்தை தனெக்கென்று வைத்துக் கொள்ள கூடாது.. அது பிறருக்கும் உதவும் வகையில் இருக்க வேண்டும் என்று நினைத்த ராஜேந்திரன் படிக்க சிரமப்படும் மாணவர்களுக்காக செலவிட வேண்டும் என்று முடிவு செய்தார்.
வாழ்க்கையில் இப்போது அவர் சம்பாதிக்கும் அத்தனை பணமும் படிக்க கஷ்டப்படும் ஏழைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர தன் வருமானத்தில் பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.. இவரது அப்பள நிறுவனத்தில் 40 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருவதுடன், அவர்களை அவ்வப்போது சுற்றுலா அழைத்து சென்று வருகிறார்.
கடந்த 2018-ல் மாநகராட்சி திரு.வி.க.பள்ளியில் 10 புதிய வகுப்பறைகள், இறைவணக்க கூடம் உள்ளிட்டவைகளை ரூ.1.10 கோடி ரூபாய் நிதியில் கட்டிக்கொடுத்துள்ளார். அண்மையில் கைலாசபுரம் மாநகராட்சி பள்ளியில் ரூ.71.45 லட்சம் செலவில் 4 வகுப்பறைகள், கழிப்பறை, உணவுக்கூடம் ஆகியவற்றை கட்டிக்கொடுத்துள்ளார்.
கொடை, ஈகை, தானம், தர்மம் எல்லாம் சத்தமின்றி பிறர் அறியாத வண்ணம் தரப்பட வேண்டியவை. ஊரறியும் வண்ணம் தம்பட்டம் அடித்து தரக் கூடாதவை. இதைத்தான் “வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுப்பது” என கூறுவார்கள்.
அப்படி வலது கைக்கு தெரியாமல் இடது கையால் உதவிய ராஜேந்திரன் இதுவரை தானாக சென்று எந்த விளம்பரமும் தேடிக்கொள்ளவில்லை. இருந்தும் அவரைப் பற்றி அறிந்த பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, ராஜேந்திரனின் அப்பள கம்பெனிக்கு நேரில் சென்று அவரை கட்டித்தழுவி, பொன்னாடை போர்த்தி, திருக்குறள் நூல் அளித்து பாராட்டு தெரிவித்தார்.
சாலமன் பாப்பையா கூறுகையில், “அண்மையில் நான் பயின்ற மாநகராட்சி பள்ளிக்கு நானும் ரூ.20 லட்சம் நிதி அளித்தேன். என்னைப் பொறுத்தவரை நான் அந்தப்பள்ளியில் படித்தேன். அதனால் கொடுத்தேன். ஆனால், ராஜேந்திரன் வெறும் 5ம் வகுப்பு மட்டும் படித்து விட்டு இவ்வளவு நிதியை பள்ளிகளுக்கு கொடுத்துள்ளார். அது போற்றத்தக்க செயல் என நினைத்தேன். அதனாலயே அவரை நேரில் வந்து வாழ்த்தினேன். எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
இதுகுறித்து ராஜேந்திரன் பேசும் போது 1951ல் வெறும் 300 ரூபாய் பணத்துடன் விருதுநகரில் இருந்து மதுரைக்கு பிழைக்க வந்து, வற்றல் கம்பெனி ஆரம்பித்து தான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன். எனக்கு தொழிலை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியும். அதில் கிடைக்கும் பணத்தில் பிறக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி வாழ்ந்து வருகிறேன். எதுவுமே இல்லாமல் வந்த எனக்கு வாழ்க்கையை கொடுத்த இந்த ஊருக்கு என் நன்றியை செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மாநகராட்சி பள்ளிகளுக்கு இந்த நிதி உதவியை செய்து கொண்டிருக்கிறேன்.
திரு.வி.க. பள்ளிக்கு புதிய சமையல் கூடம், புது மண்டபத்தில் அருங்காட்சியகம் ஆகியவை கட்டுவதற்கும் திட்டமிட்டுள்ளேன். இதுதவிர அரசு சார்பில் மீனாட்சியம்மன் கோயில் புது மண்டபத்தில் அருங்காட்சியகம் அமைக்க உள்ளனர். அதற்கு ரூ.2.5 கோடி நிதியுதவி கொடுக்க உள்ளேன். செல்லூரில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டித் தரவும் முடிவு செய்துள்ளேன் என்று ராஜேந்திரன்தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா












