உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை, ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. உலகக் கோப்பை தொடருக்கு 2 மாதங்கள் இருக்கும் நிலையில் தயார் செய்யப்பட்டுள்ள அட்டவணையில் ஒட்டுமொத்தமாக 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரையில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து தான் உலகக் கோப்பை தொடரை நடத்தியுள்ளது. ஆனால் முதல் முறையாக இந்தியா தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது. தொடக்க போட்டியில் அக்டோபர் 5-ம் தேதி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.
அதே போல போட்டியை நடத்தும் இந்தியா, அக்டோபர் 8-ம் தேதி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்நிலையில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள அணியின் பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்போட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஸ் ஹசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
உலகக் கோப்பை தொடரின் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் வரும் செப்டம்பர் 28-ம் தேதிக்குள்ளாக அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.







