தேனி மாவட்டம் சிறை ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி அருகே தேனி மாவட்ட சிறையில் வலிப்பு வந்ததாக நடித்து காவலர்களை தாக்கிவிட்டு 17 சிறைக் கைதிகள் தப்பியோடினர். இதனையடுத்து போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக முன்னாள் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தேனி மாவட்டச் சிறையிலிருந்து நேற்று இரவு சுமார் 17 கைதிகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக நாடகமாடி, சிறைக் காவலர்களைத் தாக்கி தப்பிச் சென்றதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது!
சினிமாவையே மிஞ்சும் இந்தச் சம்பவம், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் தவெக அரசு எந்த அளவுக்குத் தோல்வியடைந்திருக்கிறது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
காவல்துறை வெளியில் இருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்வதில் தான் அலட்சியம் காட்டுகிறது என்றால் சிறைக்குள் இருக்கும் கைதிகளைக் கண்காணிப்பதிலும் படுதோல்வி அடைந்திருக்கிறது.
இத்தனை காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தும் சுமார் 17 கைதிகள் தப்பிச் செல்லும் அளவுக்கு சிறைத் துறையின் பாதுகாப்பு சீர்குலைந்திருப்பது கேள்விக் குறியாகியுள்ளது.
தொடர்ந்து தமிழக மக்களின் பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கையும் உறுதிசெய்ய தவறி வரும் தவெக அரசு, தனது நிர்வாகத் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும்!
தப்பியோடிய கைதிகள் அனைவரையும் உடனடியாக மீண்டும் கைது செய்து, இந்தப் பாதுகாப்புக் குளறுபடிக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் சிறைகளில் கூடுதல் பாதுகாப்பினைத் தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




