அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
அம்மா மினி கிளினிக் திட்டம் முடிவடைந்து விட்டது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். அரசின் இந்த முடிவுக்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம் ஏழை, எளிய மக்கள் நலன் காக்கும் திட்டமாகும். தமிழக அரசு, 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாக அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. காரணம் அம்மா மினி கிளினிக்குகள் மூலம் ஏழை, எளிய மக்கள் பெரும் பயனடைந்துள்ளனர். மேலும் இந்த கிளினிக்குகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரது பணியும் சிறப்பானது.
அம்மா மினி கிளினிக்குகள் மூலம் மாதாந்திர மருந்துகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் அம்மா மினி கிளினிக்குகள் நடைபெறுவதில் ஏதேனும் குறை இருந்தால் அதைச் சரிசெய்து, தொடர்ந்து நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளலாம். அதை விடுத்து மூட முடிவெடுத்துவிட்டு, ஏதேனும் காரணங்களைக் கூறினால் அதைப் பொதுமக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் ஏற்கமாட்டார்கள். எனவே தமிழக அரசு, அம்மா மினி கிளினிக்குகளைத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்தி, பொதுமக்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும்”என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.








