பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் நட்பை ஏற்படுத்த, மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மத்திய அமைச்சர் அமித் ஷா அலுவலக போன் நம்பரை மோசடியாக பயன்படுத்தியதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்ததாகக் கூறப்படுபவர், சுகேஷ் சந்திரசேகர். இரட்டை இலை சின்னத்தை மீட்க, டி.டி.வி. தினகரன் தரப்புக்காக, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் பெங்களூரு, சென்னை பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவருடைய பங்களாவுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதற்கிடையில், சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சுகேஷ் மீது டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டார். அவரிடம் பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகரின் வழக்கறிஞர் ஆனந்த் மாலிக், ஜாக்குலின் பெர்னாண்டஸும் சுகேஷும் காதலித்து வந்தனர் என்று கூறியிருந்தார். அதை ஜாக்குலின் வழக்கறிஞர் மறுத்திருந்தார். இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகருக்கு நடிகை ஜாக்குலின் முத்தம் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. அதில், ஜாக்குலின் நம்பருக்கு சுகேஷ் சந்திரசேகர் டிசம்பர் 2020-ல் இருந்து ஜனவரி 2021-வரை பலமுறை அழைத்துள்ளார். ஆனால், அவர் அதை கண்டுகொள்ளவில்லை. பின்னர், அவர் மேக்கப் கலைஞர் ஷான் என்பவர் நம்பர் கிடைத்தது. அதைத் தொடர்பு கொண்டு, மத்திய அமைச்சர் அமிஷ் ஷா அலுவலக எண்ணில் இருந்து பேசுவது போல மோசடியாக போன் செய்திருக்கிறார்.
தொடர்ந்து, தான், ஜெயலிதாவின் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் ஜாக்குலினின் தீவிர ரசிகன், தமிழில் சில படங்களை தயாரிக்க இருப்பதாகவும் கூறி தொடர்பை ஏற்படுத்தி உள்ளார். சுகேஷ் கைது செய்யப்படும் வரை ஜாக்குலினுடன் தொடர்பில் இருந்ததாகவும் அவரிடம் தனது பெயர் ’சேகர் ரத்னவேல்’ என்று சுகேஷ் கூறியதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவருக்கு வைரத்தோடு, பிரேஸ்லட் உட்பட பல கோடி மதிப்புள்ள பொருகளை பரிசாக கொடுத்துள்ளார். நடிகை நோராவுக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்திருக்கிறார். தொடர்ந்து ஜாக்குலினுடன் தொடர்புகொண்ட சுகேஷ், அமெரிக்காவில் இருக்கும் நடிகையின் சகோதரி ஜெரால்டினுக்கு 1,50, ஆயிரம் அமெரிக்க டாலர்களை கடனாக கொடுத்திருக்கிறார். இந்த தகவல்கள் ஜாக்குலிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.