சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் குடும்ப கட்சியான திமுகவுக்கு முடிவு கட்டி எம்ஜிஆர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, மாவட்ட பாஜக சார்பில் தச்சநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், திமுகவும் காங்கிரசும் நான்கு தலைமுறைகளாக, இந்த தேசத்தில் ஆட்சி செய்து வருவதாகக் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள ஏழைகள் குறித்து பாஜக கவலைப்படுவதாகத் தெரிவித்த அமித் ஷா, ஆனால், திமுக தலைவரான மு.க. ஸ்டாலினுக்கு, தனது மகனைப் பற்றி மட்டுமே கவலை உள்ளதாகக் குறிப்பிட்டார். உதயநிதியை முதலமைச்சராக்க வேண்டும் என்ற கவலை மட்டுமே ஸ்டாலினுக்கு உள்ளதாகவும் அவர் விமர்சித்தார். மக்களாட்சிக்கும் குடும்ப ஆட்சிக்கும் இடையே நடைபெறும் யுத்தம்தான் இந்த தேர்தல் என குறிப்பிட்ட அமித் ஷா, குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பாடுபடும் கட்சி அதிமுக பாஜக ஆனால் குடும்ப வளர்ச்சிக்காக பாடுபடும் கட்சி திமுகவும், காங்கிரசும் என விமர்சித்த அமித்ஷா, மக்களுக்கான ஆட்சி வேண்டுமா குடும்ப கட்சி ஆட்சி வேண்டுமா என மக்கள் முடிவு செய்ய வேண்டும் என நெல்லையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூறினார்.







