பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளான அஜித் நடிப்பில் உருவாகிய துணிவு மற்றும் விஜய் நடிப்பில் உருவாகிய வாரிசு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின.
சென்னையின் புகழ் பெற்ற திரையரங்கமாக இருக்கக்கூடிய கோயம்பேடு ரோகிணி
திரையரங்கில் நேற்று இரவு எட்டு மணி முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கினர்.
முதன்முறையாக அஜித்தின் படம் சிறப்பு காட்சியாக நள்ளிரவு 1 மணிக்கு வெளியாகிய நிலையில் ஆயிரக்கணக்கான அஜித் ரசிகர்கள் கோயம்பேடு திரையரங்கிலும் கோயம்பேடு மதுரவாயல் நெடுஞ்சாலையில் கூடியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு விஜய் நடிப்பில் உருவான வாரிசு படம் ரோகிணி திரையரங்கில் வெளியானது.
பொங்கலுக்கு வெளியாகினாலும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆனது போல பட்டாசுகளை
வெடித்தும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் ஈடுபட்டனர். அதே
வேளையில் கோயம்பேடு மதுரவாயில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் கனரக வாகனங்கள் மீது அஜித் ரசிகர்கள் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் துணிவு படத்தின் சிறப்பு காட்சி ஒரு மணிக்கு தொடங்க இருந்த வேளையில் வாரிசு பட பேனர் கிழிய விஜய் மக்கள் இயக்க கொடியுடன் நூற்றுக்கணக்கான விஜய் ரசிகர்கள் குவிந்து தளபதி தளபதி என முழக்கமிட்டனர்.
துணிவு படத்தின் சிறப்பு காட்சியை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்ததால்
ரோகிணி திரையரங்கில் வாயிற் கண்ணாடி கதவு நொறுங்கியது. மேலும் வாரிசு பட பேனர் கிழிந்த கோபத்தில் விஜய் ரசிகர்கள் அஜித் படத்தின் பட பேனரை கிழித்தெறிந்தும் வாரிசு படத்தின் பேனருக்கு பால் ஊற்றியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தொடர்ந்து ரோகிணி திரையரங்கில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே
வாக்குவாதம் ஏற்பட்டதன் காரணமாக காவல்துறையினர் தடியடி நடத்தி விஜய் ரசிகர்களை திரையரங்கில் இருந்து வெளியேறச் செய்தனர். இத்துடன் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் கோயம்பேடு மதுரவாயில் நெடுஞ்சாலையில் இளைஞர்கள் பைக் ரேசிலும் ஈடுபட்டனர்.

துணிவு படம் முடிந்து வெளியே வந்த அஜித் ரசிகர்கள் துணிவு பட பேனர்கள் கிழிந்து கிடப்பதை கண்டு காவல்துறையுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உச்சபட்ச நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகிய நிலையில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் ஒரே நேரத்தில் கூட பேனர் கிழிய தொடங்கிய சம்பவம் இறுதியில் போலீசாரின் தடியடியில் முடிந்தது.
ரோகிணி திரையரங்கின் வாயிற் கண்ணாடி கதவு உடைக்கப்பட்ட சம்பவம் மற்றும்
கூட்டத்தில் செருப்புகளை வீசியது, போக்குவரத்திற்கு இடையூறாக கனரக வாகனங்கள்
மீது ஏறியது மது அருந்திவிட்டு சலசலப்பில் ஈடுபட்டவர்கள் என 15க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறையினர் பிடித்து வைத்துள்ளனர்.







