“பில்டர் காபி நல்லா இருக்கே” என எடுத்து குடிப்பதற்க்கு நம் விரல்கள் போகும் வகையில் காபி படத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார் சென்னை ஆர்.ஏ.புரத்தை சேர்ந்த வருணா ஸ்ரீதர்.
சில தினங்களுக்கு முன்பு தான் வரைந்த தத்ரூபமான ஓவியத்தால் இணைய உலகை கலக்கி வருகிறார் சென்னை ஆர்.ஏ.புரத்தை சேர்ந்த வருணா ஸ்ரீதர். 21 வயதான இவர் ஒளிப்பதிவுக்கான படிப்பை முடித்துள்ளார். தனது அப்பா ஓவியர் என்பதாலோ என்னவோ சிறு வயது முதலே ஓவியத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ளார். பெற்றோர்களின் உதவியால் சிங்கப்பூர் பாங்காக் போன்ற நாடுகளுக்கு சென்று கலைக்கென பிரத்யேக படிப்பை கற்று தேர்ந்துள்ளார். மேலும் நான்கு வயது முதல் தற்போது வரை 13 ஓவிய கண்காட்சியை நடத்தியிருக்கிறார். இதில் கிடைக்காத அங்கீகாரம், சமீபத்தில் வரைந்த “பில்டர் காபி” ஓவியம் மூலம் கிடைக்கப்பெற்றது.
காபி ஆவி பறக்க அதற்குறிய பாத்திரத்தில் இருக்க, அதற்கு பக்கத்தில் செய்தித்தாள் இருக்கும் இந்த ஓவியம் வரைய நான்கு நாட்கள் ஆகியிருக்கிறது. குறிப்பாக காபி மேல் இருக்கும் நுரை பகுதியை வரைவதற்கு மட்டும் மெனக்கெடல் அதிகம் எடுத்ததாக தெரிவிக்கிறார் ஸ்ரீதர். ஓவியம் வரைந்த பின் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த சில மணி நேரத்தில் லைக்குகள் குவிய, முடங்கி கிடந்த தனது ட்விட்டர் பக்கத்திலும் இதை பதிவிட்டிருக்கிறார். அவ்வளவு தான், ஒரே நாளில் செலிபிரிட்டி’யாக மாறிவிட்டார்.
தமிழக நிதியமைச்சர் பி.டி .ஆர் .பழனிவேல் தியாகராஜன் உட்பட பல பிரபலங்கள் லைக்கை தட்டியதோடு நிறுத்தாமல் பின்தொடரவும் செய்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் முட்டை உடையும் ஓவியம், இட்லி சாம்பார் டிபன் என இவரது மற்ற ஓவியங்களும் தற்போது கவனத்தை பெற்றுவருகிறது. மேலும் அடுத்து வரையவிருக்கும் மசாலா தோசை ஓவியத்திற்கு இப்போதே முன் பதிவு செய்ய ஆரம்பிவித்துவிட்டனர் இவரது ரசிகர்கள்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் ” impressionism கூட realism’ த்தை இணைத்து படம் வரைய வேண்டும் என்பது தான் என் விருப்பம் ,ஓவியத்துறை வரலாற்றில் என் பெயர் இடம் பிடிக்க வேண்டும் என்பதே என் இலக்கு” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஓவியம் கண்களுக்கு விருந்தாக அமையும் என கேள்விப்பட்டிருப்போம். இவரின் கதையில் அது உண்மையாகவே மாறியிருக்கிறது.








