தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் 78 லட்சம் பெண் பயணிகள், நகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழ்நாட்டில் 7,222 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் எத்தனை பெண்கள் கட்டணமின்றி பயணிக்கிறார்கள் என்பது குறித்து அறிய கடந்த 12ம் தேதி முதல் கட்டணமில்லாமல் பயணிப்பதற்கு பயணச்சீட்டு அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். கடந்த 12ம் தேதி முதல் தற்போது வரை 78 லட்சம் பெண் பயணிகள் பயணித்துள்ளதாகவும், நாளொன்றுக்கு சுமார் 28 லட்சம் பெண் பயணிகள் பயணிப்பதாகவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிகபட்சமாக, திருநெல்வேலியில் 68 சதவீத பெண் பயணிகள் இலவசமாக பயணித்துள்ளதாக கூறிய அவர், 5,741 திருநங்கைகள், 51,615 மாற்றுத்திறனாளிகள், 8,396 மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்களும் கடந்த 3 நாட்களில் பயணம் செய்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெறுவதாகவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.