தொட்டதெல்லாம் பொன்னாக்கும் சோப்ராவும், அவர் பின் இருக்கும் விளையாட்டு அறிவியலும்!!

செல்லும் இடங்களில் எல்லாம் தங்கப்பதக்கத்தை தட்டித் தூக்கி, இந்தியாவுக்கு கொண்டுவந்து பெருமை சேர்க்கும் தங்கமகன் நீரஜ் சோப்ராவின் பின் இருக்கும் அறிவியல் குறித்து விரிவாகக் காணலாம்…. ”உன் அலும்ப பார்த்தவன்…. உங்க அப்பன் விசில…

செல்லும் இடங்களில் எல்லாம் தங்கப்பதக்கத்தை தட்டித் தூக்கி, இந்தியாவுக்கு கொண்டுவந்து பெருமை சேர்க்கும் தங்கமகன் நீரஜ் சோப்ராவின் பின் இருக்கும் அறிவியல் குறித்து விரிவாகக் காணலாம்….

”உன் அலும்ப பார்த்தவன்…. உங்க அப்பன் விசில கேட்டவன்…. உன் மவனும் பேரனும்….. ஆட்டம் போட வைப்பவன்…”

இந்த பாடல் வரிகளை கேட்கும் போது, அதன் ரியாலிட்டியை விளையாட்டு உலகில் ஒரு முறையாவது ஒருவரோடு பொருத்திப் பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம், எண்ணற்ற விளையாட்டு ஆர்வலர்களுக்கு தோன்றும். அப்படி இந்த பாடல் வரிகளை பொருத்திவிட சரியான ஒருவர் என்றால் அது இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்பராவாகத்தான் இருந்துவிட முடியும்.

5.11 அடி உயரம், நீளமான முடி, கட்டான உடல் அமைப்பு, கலர் ஸ்கின் டோன் என பாலிவுட்டில் டிபிக்கல் ஹிந்தி திரைப்படங்களின் கதாநாயகர்களை போலவே அம்சமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் சோப்ரா, உலக அரங்கில் இன்று இந்தியாவின் தடகள விளையாட்டிற்கு அடையாளமாக உருவெடுத்துள்ளார்.

இந்திய ராணுவத்தின் தரைப் படையில் பணியாற்றும் நீரஜ் சோப்ராவுக்கு 25 வயது தான் ஆகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் இந்த இளம் வயதில் அவரது சாதனைகள், தனது வயதை தாண்டிய அனுபவத்திற்கு சமமான ஒன்றாகும்.

2020 ஆம் ஆண்டு வரை ஒலிம்பிக்கில் தங்கத்திற்கான இந்தியாவின் கனவு என்பது, மீளா ஒன்றாக தொடர்ந்து வந்த நிலையில், அதனை நிஜமாக மாற்றி இந்திய தடகள வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதினார் நீரஜ் சோப்ரா.

தங்கத்திற்கான இலக்காக 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல், அதை தங்கப் பதக்கமாக பெற்று கொடுத்து சரித்திரம் எழுதினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை பெருமைப்படுத்தும் விதமாக தான் இந்திய விளையாட்டு ஆணையம் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஆகஸ்ட் 7 ஆம் நாளை தேசிய ஈட்டி எறிதல் நாளாக அறிவித்தது.

பெரும்பாலான வெளிநாட்டவர்கள் மத்தியில் இந்தியர்கள் தடகள விளையாட்டில் போட்டியிடுவது சாத்தியமில்லாத ஒன்று என நினைத்துக் கொண்டு இருந்தவர்கள் எல்லாம் நீரஜ் சோப்ராவின் இந்த சாதனைக்கு பிறகு தான் பறந்து விரிந்து சிந்திக்க தொடங்கினர். விளையாட்டுத் துறையில் மேலை நாட்டவர்கள் சாதிக்க மிக முக்கிய காரணமாக இருப்பது ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் தான்…. அதென்ன ஸ்போர்ட்ஸ் சயின்ஸ்?

விளையாட்டுத் துறையில் கடந்த 10 வருடங்களில் மிகப் பரவலாக முறைப்படுத்தப்படும் வழிமுறைகளுக்கு இலக்கணமே இந்த ஸ்போர்ட்ஸ் சயின்ஸ். அதாவது நமது உடல் எந்த விளையாட்டிற்கு உகந்தது, அல்லது நாம் ஒரு குறிப்பிட்ட விளையாட்டுக்கு தகுந்தார்போல் உடலை வடிவமைத்துக் கொள்வதற்கு காரணியாக விளங்குகிறது இந்த விளையாட்டு அறிவியல்.

நீரஜ் சோப்ராவின் வெற்றிக்கும், தொடர் சாதனைகளுக்கும் இதுவே காரணியாக அமைகிறது. ஒருவர் தன்னுடைய முழு உழைப்பையும் விளையாட்டிற்காக கொடுப்பதால் மட்டுமே களத்தில் எல்லாம் சரியாக அமைந்து அவர் சாம்பியன் பட்டம் வெல்ல வைப்பது கிடையாது. சரியான உணவு, அதை நேரத்திற்கு உண்பது, எந்த அளவிற்கு எடுத்துக் கொள்வது, அது சத்தானதா? எவ்வளவு தூக்கம் தேவை, உடற்பயிற்சி எந்த அளவுக்கு செய்ய வேண்டும், குறிப்பிட்ட பகுதிகளை உடலில் மேம்படுத்த என்ன செய்ய வேண்டும், நமது விளையாட்டில் நுணுக்கங்களை எப்படி செயல்படுத்த வேண்டும் என ஒவ்வொன்றுக்கும் இலக்கணம் வகுத்து அதை பின்பற்ற செய்வதே இந்த விளையாட்டு அறிவியலின் வேலை.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு ஒருவரின் உடலின் செயல்பாடுகளை கணித்து, அதற்கு தகுந்தாற்போல ஒவ்வொன்றையும் பின்பற்றுவதன் மூலம் இதுவரை பார்த்திடாத வகையில் எண்ணற்ற அற்புதங்கள் நிகழ்கிறது.

இந்திய தடகள வீரர்களில் நீரஜ் சோப்ரா இதனை தனது ஆரம்பகால வளர்ச்சி முதல், தற்போது வரை செயல்படுத்தி வருகிறார். எனவே தான் இந்திய தடகள வீரர்களுக்கு அவர் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார். ஆரம்ப காலம் முதல் டிராக் மற்றும் பீல்ட் நிகழ்வுகளில் இந்தியாவின் பங்களிப்பு சற்று உத்வேகம் இல்லாமல் தொடர்ந்து வந்த சமயத்தில், இந்த இளைஞரின் செயல் இளம் தலைமுறையினர் மத்தியில் புது வெறியை கூட்டியுள்ளது.

விளையாட்டு அறிவியலை முற்றிலும் நம்பும் நீரஜ் சோப்ரா, பொதுவாக ஒரு நாட்டில் பெரிய போட்டிகளை சந்திக்கப் போகிறார் என்றால் அங்கு 4 மாதங்களுக்கு முன்னதாகவே சென்று பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்து விடுவாராம்.

உதாரணத்திற்கு, அவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க செல்கின்றார் என்றால், 4 மாதங்களுக்கு முன்னதாக அங்கு சென்று அந்த இடத்தின் சூழல், பருவநிலை உள்ளிட்டவைகளை பழகி, அதற்கு தகுந்தாற்போல அட்டவணையை பின்பற்றி பயிற்சி மேற்கொண்டு போட்டிகளை எதிர்கொள்வாராம்.

சோப்ராவின் வெற்றிக்கு பின் எப்போதும் ஒரு சாப்ட்வேர் நிறுவனம் போன்ற அமைப்பாக வல்லுநர்கள் அடங்கிய குழுவானது பயணிக்கும். அந்த குழுவின் ஒவ்வொரு முயற்சியும் நீரஜ் சோப்ராவின் அடுத்தடுத்த நகர்வுகளை கண்காணிப்பதும், உந்து சக்தியாக இருப்பது தான்.

விளையாட்டு அறிவியலின் முயற்சியால் தான் நீரஜ் சோப்ரா 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது, 2022 இல் டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது, கடந்த வருடம் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றது மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் என அடுக்கடுக்கான தொடர் சாதனைகளை படைக்க செய்தது.

இந்த முறை உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முன்னர் தகுதி சுற்று போட்டிகளை எதிர்கொண்ட நீரஜ் சோப்ரா தனது முதல் வாய்ப்பில் 88.77 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றார் சோப்ரா.

இறுதிப் போட்டியில் தங்கம் வெல்லும் ஒரே எண்ணத்தை கருத்தில் கொண்டிருந்த சோப்ரா, தனது முதல் வாய்ப்பில் தவறு செய்தாலும், இரண்டாவது வாய்ப்பில் 88.17 மீட்டர் தூரம் வீசி தங்கத்தை உறுதி செய்தார். இருப்பினும் பாகிஸ்தான் வீரர் அர்ஹத் நதீம் தனது ஒவ்வொரு முயற்சியிலும் சோப்ராவை நெருங்கினாலும் அவரால் முதலிடம் பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நீரஜ் சோப்ரா உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இது சோப்ராவின் முதல் தங்கம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் முதல் தங்கம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் மூலம், தடகளத்தில் டிராக் மற்றும் பீல்ட் நிகழ்வுகளில் இந்தியர்கள் அதிகம் பேர் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்று வருவதை அடுத்து, இந்த தங்கம் இன்னும் பல இளைஞர்களிடையே இந்தியாவை இதுபோன்ற சர்வதேச தொடர்களில் ஆளுமை பெற செய்யும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

தொடர் நம்பிக்கைகளை இந்தியர்கள் மத்தியில் நிறைவேற்றி வரும் நீரஜ் சோப்ராவின் அடுத்த இலக்கு பாரிஸ் ஒலிம்பிக் தொடர். அதிலும் தங்கம் வென்று இரண்டாவது முறையாக சாதனை படைப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. சோப்ராவின் ஒவ்வொரு வளர்ச்சியும், இந்தியாவின் ஒவ்வொரு தடகள வீரரின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும், மேலும் இந்தியர்களிடையே விளையாட்டு அறிவியல் குறித்த சிந்தனையை வலுப்படுத்தும்.

– நாகராஜன், நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.