பிரக்ஞானந்தா பெற்றோருக்கு எலெக்ட்ரிக் காரை பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா!

உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில், பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலெக்ட்ரிக் காரை பரிசாக அளிக்க உள்ளதாக ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். உலக கோப்பை செஸ்…

உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில், பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலெக்ட்ரிக் காரை பரிசாக அளிக்க உள்ளதாக ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில்  உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனுக்கு நிகராக விளையாடிய பிரக்ஞானந்தா இறுதியாக போராடி தோற்றார். இதனால் உலக கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இந்த தொடரில் பிரக்ஞானந்தாவின் திறமையான ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டது. உலகக் கோப்பை செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிச்சுற்று வரை வந்த முதல் இந்தியர், இந்தப் போட்டியின் வரலாற்றில் இறுதிச்சுற்றுக்கு வந்த இளம் போட்டியாளா் (18) என்ற பெருமைகளை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். இதையடுத்து பிரக்ஞானந்தாவுக்கு, குடியரசுத்தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வரிசையில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா பிரக்ஞானந்தாவை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். முன்னதாக, பிரக்ஞானந்தாவுக்கு ‘தார்’ காரை பரிசளிக்க வேண்டும் என்று ட்விட்டரில் பலரும் ஆனந்த் மஹிந்திராவுக்கு பரிந்துரை செய்திருந்தனர்.

இதற்குப் பதில் அளித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, ”எனக்கு இன்னொரு யோசனை இருக்கிறது. தங்கள் குழந்தைகளை செஸ் விளையாட்டில் அறிமுகப்படுத்தி இந்த அளவுக்கு ஊக்குவித்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வரும் பெற்றோரை ஊக்குவிக்க விரும்புகிறேன். மின் வாகனங்களைப் போலவே அவர்களின் பிள்ளைகளும் நம் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடு. எனவே பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாகலட்சுமி – ரமேஷ்பாபுவிற்கு எக்ஸ்யுவி 400 (XUV4OO) என்ற மின் வாகனத்தை பரிசளிக்கலாம் என்று நினைக்கிறேன்’ என்று பதிவிட்டு ‘என்ன சொல்கிறீர்கள்?’ என தனது நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷை டேக் செய்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள ராஜேஷ், ‘யோசனை வழங்கியமைக்கு ஆனந்த் மஹிந்திராவுக்கு நன்றி. எங்களது நிறுவனத்தின் மின் வாகனங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. விரைவில் ஒரு படைப்பின் மூலமாக எங்கள் குழு அவர்களை அணுகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனந்த மஹிந்திராவின் பரிசுக்கு பலரும் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.