நிலவில் பிரக்யான் ரோவர் பள்ளத்தை கண்டறிந்து பாதையை மாற்றி பாதுகாப்பாக பயணம் செய்யும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்களத்தின் லேண்டர் கடந்த 23ம் தேதி நிலவில் பத்திரமாக தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவில் தரையிறங்கிய ரோவர் தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் இந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றியை உலகின் பல்வேறு நாடுகளும் பாராட்டி வருகின்றன.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து, ரோவர் பத்திரமாக தரையிறங்கியது. ரோவர் பிரிந்து நிலவை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு புதிய அப்டேட்களையும் இஸ்ரோ அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
இஸ்ரோ கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவா் நிலவின் மீது தரையிறங்கும் காணொலியை இஸ்ரோ வெளியிட்டிருந்த நிலையில், சனிக்கிழமை, ரோவர் நகர்ந்து செல்லும் விடியோ வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இஸ்ரோ தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில், ஆக.27-ம் தேதி 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை 3 மீட்டருக்கு முன்னதாகவே ரோவர் கணித்து, அதன் பாதையை மாற்றி பயணித்ததாக தெரிவித்துள்ளது. மேலும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.







