மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் முழுமையாக வழங்க வலியுறுத்தி இந்தியா கூட்டணி தலைவர்கள் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்தனர்.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த மாதம் 19-ம் தேதி 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவும், 89 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவும், 94 தொகுதிகளுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 7-ம் தேதியும் நடைபெற்று முடிந்தது. வரும் 13-ம் தேதி 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதனிடையே, தேர்தல் ஆணையம் அளித்த வாக்குப்பதிவு புள்ளி விவரங்களில் முரண்கள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுக்கான இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிட்டது. முதற்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை 11 நாட்கள் கழித்தும், இரண்டாம் கட்ட தேர்தலில் பதிவான இறுதி வாக்குப்பதிவு சதவீதம் 4 நாட்கள் கழித்தும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
ஆனால், தேர்தல் நடந்து முடிந்த அன்று வெளியான சதவீதத்துக்கும், தாமதத்துக்கு பிறகு வெளியான வாக்குப்பதிவு சதவீதத்திற்கும் சில முரண்பாடுகள் இருந்தன. வழக்கமாக, வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்திற்குள் வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்ட நிலையில், திடீரென ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் முரண்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த தாமதத்தை நியாயப்படுத்துவதற்கான எந்த விளக்கத்தையும் தேர்தல் ஆணையம் இதுவரை அளிக்கவில்லை.
இந்நிலையில், மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் முழுமையாக வழங்கக்கோரி, தலைமை தேர்தல் ஆணையரை சந்திப்பதற்காக இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் டெல்லியில் அமைந்துள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வருகை தந்தனர். டி.ஆர்.பாலு, அபிசேக் மனு சிங்வி, டெரிக் ஓபிரையான் உள்ளிட்டோர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து இதுகுறித்த மனுவை அளித்தனர். அந்த மனுவில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதத்துடன் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையையும் வெளியிட வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, வாக்குப்பதிவு முடிந்து 48 மணி நேரத்திற்குள் பதிவான வாக்கு விகிதங்களை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms) மனுத்தாக்கல் செய்துள்ளது.







