சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேர சோதனை நடைபெற்ற நிலையில் கஞ்சா சிகரெட், கார், பேங்க் பாஸ் புக் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய போலீசார் வீட்டுக்கும் சீல் வைத்தனர்.
பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து
அவதூறாக பேசியதாக கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, 5 பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உள்ளிட்ட 3 பேர் மீது தேனி பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அவரது இல்லம் மற்றும் தியாகராய நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் தேனி மாவட்ட பழனிச்செட்டி காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
சவுக்கு சங்கர் தங்கியிருந்த அறையில் கார் ஓட்டுநர் இருவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், 10 மணி நேர சோதனைக்கு பிறகு, குடும்ப அடையாள அட்டை, டேப்,
மொபைல் போன், ரூ.2 லட்சம், கம்ப்யூட்டர் மானிட்டர், நான்கு கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், வெப் கேமரா, கார், பேங்க் பாஸ்புக் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் சோதனையில் எடுத்த பொருட்களை சரிவர கணக்கு பார்த்து மதுரவாயல் தாசில்தார் சந்திரசேகர் முன்னிலையில் சவுக்கு சங்கர் வீட்டிற்கு போலீசார் சீல் வைத்தனர்.







