அல்ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு இஸ்ரேலில் தடை – அந்நாட்டு அரசு முடிவு!

அல்ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு இஸ்ரேலில் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.  இதனால், லட்சக்கணக்கான…

அல்ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு இஸ்ரேலில் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.  இதனால், லட்சக்கணக்கான மக்கள்  இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் இதுவரை 34,356 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும்  77,368க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தியது.

 சமீபத்தில் காஸா பகுதியின் 2வது மிகப்பெரிய நகரமான கான் யூனிஸை விட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறியதாக தகவல் வெளியானது.  ஆனாலும் போரால் புலம் பெயர்ந்த பாலஸ்தீனர்களின் கடைசி புகலிடமாகத் திகழும் ராஃபாவுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாகத்தான் கான் யூனிஸ் நகரிலிருந்து படையினர் வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமாக செயல்படும் அல் ஜசீரா தொலைக்காட்சி இஸ்ரேல் – பாலஸ்தீனம் குறித்த பல முக்கியமான தகவல்களை நேரலையில் தந்து கொண்டிருந்தது.  அல் ஜசீரா தொலைக்காட்சியின் அரபு மொழி சேனலில் பணிபுரிபவர் பாலஸ்தீனத்தை சேர்ந்த வாயீல் அல் தஹ்து.  இவர் அல் ஜசீரா அரபு மொழிப் பிரிவில் தலைமைச் செய்தியாளாரக பணிபுரிந்து வருகிறார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாலஸ்தீனத்திலிருந்து அல் ஜசீரா அரபு மொழிக்காக நேரலையில் வாயீல் அல் தஹ்து செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தார்.  இதனைத் தொடர்ந்து வாயீல் அல் தஹ்துவின் மனைவி மற்று இரண்டுகள் குழந்தைகள் இஸ்ரேலின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு தற்போது இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது. இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் செய்திகள் வெளியிட்டதால்  ‘அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்குள்ள பாலஸ்தீன மக்களின் இன்னல்களையும், காஸா கள நிலவரத்தையும் வெளிக்காட்டிய ‘அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது. இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பதிவிட்டதால் ‘அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கத்தார் நாட்டு செய்தி நிறுவனமான ‘அல் ஜஸீராவை’ தடை செய்யும் நெறிமுறைகளுக்கு இஸ்ரேல் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் செய்தி விவகாரங்கள் துறை அமைச்சர் ஷ்லோமோ கார்ஹி  தனது எக்ஸ் தள பதிவில், “இஸ்ரேல் அரசுக்கு எதிராகத் தூண்டும் பதிவுகளைப் பரப்பும் எவரும் இஸ்ரேலில் இருந்து ஒளிபரப்பு செய்ய முடியாது” என பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/netanyahu/status/1787060542168862763

“அல் ஜஸீராவுக்கு இஸ்ரேலில் தடை; என் தலைமையிலான அரசு ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளது” என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பதிவிட்டால், அமைச்சரவை மூலம் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஊடகங்களை தடை செய்ய அதிகாரமளிக்கும் சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தால் கடந்த ஏப்ரலில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.