திருச்சி திருவானைக்காவல் யானை அகிலா கோயில் கதவுகளை திறந்து வெளியே வரும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவானைக்காவல் கோயில், திருச்சி காவிரி ஆற்றுக்கு அருகே அமைந்துள்ள மிக முக்கிய சிவ தலமாகும். ஜம்புகேசுவரர்- அகிலாண்டேஸ்வரி என்ற பெயருடைய இந்த சிவாலயம், சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60-வது சிவத்தலமாகும்.
இத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலில், அகிலா என்ற யானை அன்றாட இறைப்பணிகளை செய்து வருகிறது. சிறு வயதிலேயே இக்கோயிலுக்கு வந்த அகிலா, தனது சுட்டித் தனத்தால் பக்தர்களின் மனம் கவர்ந்த யானையாக இன்று வரை விளங்கி வருகிறது. இந்த நிலையில் யானை அகிலா கோவில் கதவுகளை திறந்து வெளியே வரும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ கட்சியில் கோயில் கதவுகளை யானை அகிலா திறந்து வெளியே வருவதை பார்க்கும் போது தினமும் நீங்கள் தானே கதவுகளை திறந்து வருகிறீர்கள், இன்று ஒரு நாள், நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்கிற நோக்கத்தோடு அடம் பிடித்து கோயிலில் உள்ள கார்த்திகை கோபுரத்தின் கதவுகளை அழகாய் தன் தும்பிக்கைகளால் திறந்து வெளியே வருவது போல் காட்சி இடம்பெற்றிருக்கிறது . தற்போது இந்த காட்சி சமூக வலைதளங்களில் பார்வையாளர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
யானை சிவலிங்கத்திற்கு காவல் இருந்ததால் ஆனைக்காவல் என்று பெயர் பெற்ற திருவானைக்காவல் ஆலயத்தில் அனைத்து விழாக்களிலும் யானைக்கு தான் முதல் மரியாதை என்பது குறிப்பிடத்தக்கது.
பி. ஜேம்ஸ் லிசா









