இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் அஜித் குமாரை வைத்து திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையா? மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியது என்ன?
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் விடாமுயற்சி படம் உருவாகி வருகிறது. மேலும் குட்பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதேபோல், கே.ஜி.எஃப். படம் முழுவதும் இந்தியா முழுவதும் கன்னட சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் பிரசாந்த் நீல். இவர், சலார் உள்ளிட்ட படங்களை இயக்கி பிளாக்பஸ்டர் இயக்குனராக கவனம் பெற்றுள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்தை விடாமுயற்சி படப்பிடிப்பின் இடைவெளியில் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது பிரசாந்த் நீல் – அஜித் கூட்டணியில் இரண்டு படங்கள் உருவாவது குறித்து பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இருவரும் கதை குறித்து விவாதித்ததாகவும், பிரசாந்த் இயக்கும் இரண்டு படங்களில் நடித்த அஜித் ஒப்பு கொண்டதாகவும் கூறப்பட்டது. அதில் ஒன்று அவருக்கு தனியான கதை என்றும், இன்னொன்று கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகம் என்றும் கூறப்பட்டது. இதை அடுத்து ரசிகர்கள் பலர் இந்த தகவல் உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்பினர்.
நடிகர் அஜித் எந்த சமூக வலைதளத்திலும் அதிகாரப்பூர்வ பக்கத்தை இன்னும் ஆரம்பிக்கவில்லை. இதனால் இவர் படம் குறித்து அப்டேட்டுகளையும், இவரது தனிப்பட்ட வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தான் தெரிவிக்கிறார். தற்போது அஜித் நடித்து வரும் படங்களில் போஸ்டர்களை கூட அவர்தான் ப்ரமோட் செய்து வருகிறார்.
இந்நிலையில் பிரசாந்த் நீல் உடன் படத்தில் இணைவது குறித்து அவரிடம் ஊடகத்தினர் கேள்வி கேட்டுள்ளனர். பிரசாந்த் நீலும் நடிகர் அஜித்தும் சந்தித்தது உண்மைதான் என்று கூறிய அவர், கதை குறித்த விவாதங்கள எதுவும் இருவருக்கும் இடையே நடைபெறவில்லை என்று பேசியிருக்கிறார். இதனால் இருவரும் இணைந்து பணிபுரிய வாய்ப்பில்லை என்பது தெளிவாகி இருக்கிறது. தற்போது, அஜித்குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.




